பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரின் மிகப்பெரும் போட்டியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னாசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், "எந்த அணி வெற்றி பெறுகிறது என்பது முக்கியம் இல்லை" என பத்து ஆண்டுகளுக்கு முன் தோனி பதிவிட்ட ட்வீட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் அல்லது 18.1 ஓவருக்குள் சேஸிங் செய்து முடித்தால் மட்டுமே 14 புள்ளிகளுடன் அதிக நெட் ரன் ரேட் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை உள்ளது. சிஎஸ்கே அணி வெற்றி பெறாவிட்டாலும் கூட பெங்களூரு அணி அதிக நெட் ரன் ரேட் பெறாமல் பார்த்துக் கொண்டாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும்.

எனவே இந்த போட்டியில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களால் உற்று கவனிக்கப்படும். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என அனைவரும் ஆவலாக உள்ளனர். ஆனால், ஐபிஎல் தொடரில் வெற்றி, தோல்வி முக்கியமே அல்ல என குறிப்பிடும்படி தோனி பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், "எந்த அணி வெற்றி பெறுகிறது என்பது முக்கியமே இல்லை. நான் இங்கே பொழுதுபோக்கிற்காகவே இருக்கிறேன்" என குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவை தற்போதைய சூழ்நிலையுடன் பொருத்திப் பார்த்து ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடரில் தோனி கால் மற்றும் இடுப்பில் வலியுடன் விளையாடி வருகிறார்.
ரசிகர்களுக்காகவே அவர் வலியுடன் விளையாடி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ரசிகர்களை மட்டுமே கருத்தில் கொண்டு தோனி விளையாடி வருவதை குறிப்பிடும் ரசிகர்கள், அத்துடன் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பது முக்கியமில்லை. ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு கிடைக்கிறதா இல்லையா என்பது தான் முக்கியம் என தோனி பத்து ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருப்பதாக சொல்லி வருகிறார்கள்.