பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற பல்வேறு கணக்குகள் இணையத்தில் வலம் வருகின்றன.
ஒருவேளை மழை காரணமாக போட்டி ஐந்து ஓவர்களாக குறைக்கப்பட்டால் ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கணக்கு அந்த அணி ரசிகர்களின் தலையை சுற்ற வைத்துள்ளது. இந்தப் போட்டி ஐந்து ஓவர்களாக நடத்தப்படும் பட்சத்தில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 75 ரன்கள் குவித்தால், ஆர்சிபி அணி அதை 3.1 ஓவரில் சேஸிங் செய்து முடிக்க வேண்டும்.

அதாவது 19 பந்துகளில் 76 ரன்கள் எடுக்க வேண்டும். அப்படி என்றால் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ஃபோர் அடிக்கப்பட வேண்டும் அல்லது ஒவ்வொரு ஓவரிலும் 4 சிக்ஸ் அடிக்கப்பட வேண்டும். இது சாத்தியமே இல்லை என்பதால் இந்த கணக்குகள் ஆர்சிபி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
ஒருவேளை ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவித்தால், சிஎஸ்கே அணியை மிகக் குறைந்த ரன்கள் மட்டுமே எடுக்க வைத்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால், இதெல்லாம் சாத்தியம் இல்லாத விஷயங்கள் என்பதால் மழை பெய்தால் அது நிச்சயம் ஆர்சிபி அணிக்கு பாதகமாகவே அமையும் என கூறப்படுகிறது. சிஎஸ்கேவைப் பொறுத்தவரை ஐந்து ஓவர்களில் 75 ரன்கள் குவிப்பது என்பது சாத்தியமே. சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல் ஆகியோர் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்துள்ளனர். மேலும், தோனி இந்த ஆண்டு ஆடிய போட்டிகளில் எல்லாம் ஒரு ஓவருக்கு குறைந்தபட்சமாக 15 முதல் 25 ரன்கள் வரை எடுத்திருக்கிறார். எனவே, மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்ட அது சிஎஸ்கே அணிக்கு சாதகமாகவே அமையும்.