CSK vs RCB: இந்த ஒரு மேட்ச் ஜெயிச்சா பழசை மறந்துறலாம்.. சிஎஸ்கேவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!
பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்துள்ளது. தான் விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் படுதோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025 ஐபிஎல் தொடரிலும் 10வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, இந்த ஆண்டும் அதே நிலையில் நீடிப்பது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான், சிஎஸ்கே அணி தனது பரம எதிரியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, சிஎஸ்கே அணிக்கு ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த காலத் தோல்விகளையும், இந்த ஆண்டு தொடக்கத்தில் கிடைத்த ஏமாற்றங்களையும் ஒரேடியாக மறக்கடிக்கச் செய்ய ஆர்சிபி-க்கு எதிரான இந்த வெற்றி மிக அவசியம்.

ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான மோதல் எப்போதுமே அனல் பறக்கும். இரு அணி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொள்வது வழக்கம். குறிப்பாக, கடந்த 2025ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்று சாம்பியனாக வலம் வருகிறது. எனவே, ஒரு சாம்பியன் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்துவது சிஎஸ்கே வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தரும்.
தற்போது புள்ளிப்பட்டியலில் நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே மிக மோசமான நிலையில் 10வது இடத்தில் உள்ளது. மறுபுறம், ஆர்சிபி அணி தான் விளையாடிய ஒரே போட்டியில் வெற்றி பெற்று 4வது இடத்தில் வலுவாக உள்ளது. தோனி இல்லாத நிலையில், ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி ஆர்சிபி-யை வீழ்த்தி வெற்றிப் பாதைக்குத் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த மெகா மோதல் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. பெங்களூரு மைதானத்தில் ரன் மழை பொழியும் என்பதால், சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட வேண்டியது கட்டாயம். ஒரு வலுவான வெற்றியைப் பதிவு செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணியின் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதால் இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications