பெங்களூர்: சிஎஸ்கே அணியுடன் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே நீண்ட தூரம் பயணிப்பதற்கான தொடக்க புள்ளி வைக்கப்பட்டதாக பயிற்சியாளர் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ஆயுஷ் மாத்ரேவின் ஆட்டத்தை விடவும், அவரின் நிதானமே அதிகமாக எங்களை ஈர்த்துவிட்டதாக கூறிய ஃபிளமிங், இந்திய யு19 வீரர்களை உலகக்கோப்பையில் எதிர்கொள்வதை நினைத்தால் அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரே சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. ஆர்சிபி அணி நிர்ணயித்த 214 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்ய முடியாமல், 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தாலும், 17 வயதாகும் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் பேசுகையில், ஆயுஷ் மாத்ரேவிடம் திறமை இருக்கிறது. அவரிடம் ஒரு சில்கி ஸ்விங் உள்ளது. அதேபோல் ஆக்ரோஷமாகவும் விளையாடக் கூடியவராக உள்ளார்.
ஒரு மாடர்ன் டே டி20 கிரிக்கெட்டருக்கு தேவையான அத்தனை விஷயங்களும் ஆயுஷ் மாத்ரேவிடம் உள்ளது. இவை எல்லாவற்றையும் கடந்து, அவர் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் ட்ரையல்ஸிலும், மிகப்பெரிய போட்டியிலும் ரன்களை குவித்ததுதான் என்னை அதிகம் ஈர்த்துவிட்டது. ஒரு வீரரிடம் ஏராளமான ஷாட்கள் இருக்க வேண்டும் என்பது சரிதான்.
ஆனால் அதனை மிகப்பெரிய போட்டிகளிலும் பதறாமல் வெளிப்படுத்த கூடிய அளவிற்கு நிதானமும் இருக்க வேண்டும். உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு முன்பாக அவரால் சிறந்த கிரிக்கெட்டை விளையாட முடிகிறது என்பதே என்னை அதிகமாக ரசிக்க வைக்கிறது. ஆயுஷ் மாத்ரேவின் பேட்டிங் குறித்து விவரிப்பது கடினமான விஷயம். ஏனென்றால் அவர் செய்யும் அனைத்து செயல்களும் தரத்துடன் இருக்கிறது.
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே ஆயுஷ் மாத்ரேவின் ஆட்டத்தை பார்த்துவிட்டோம். இந்த ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்களின் ஆட்டத்தை பார்த்து ஆச்சரியமடைந்தோம். இப்போது எங்கள் அணியிலும் 17 வயது வீரர் அசத்தி இருப்பது கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. அவரின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை எப்போதும் நிதானமாக செயல்படுவோம். அதுதான் எங்களின் ஸ்டைல். ஆயுஷ் மாத்ரே மிகச்சிறப்பாக சிஎஸ்கே அணியுடன் பொருந்தி போகிறார். அவருக்கு ஏற்றபடி சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவர் எப்படி இருக்கிறாரோ, அப்படிதான் சிஎஸ்கே அணியும் உள்ளது.
முதல் நாளில் இருந்த அவர் உற்சாகமாக உள்ளார். அவருடன் சிஎஸ்கே அணி ஒரு நீண்ட தூரம் பயணிக்க உள்ளது. இளம் வீரர்கள் பலரும் கொஞ்சம் கூட அச்சமின்றி விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக அவர்கள் தங்களின் ஷாட்களை ஆடுகிறார்கள். திறமையை பொறுத்தவரை வயது ஒரு விஷயமே கிடையாது.
14, 18, 21 என்று எந்த வயதாக இருந்தாலும், சிறப்பாக விளையாட வேண்டும். அதிலும் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆயுஷ் மாத்ரே மிரட்டி இருக்கிறார்கள். அவர்களின் வயதிற்கும் அதிகமான முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். யு19 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகச்சிறந்த தொடக்க வீரர்களை கொண்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் இவர்களை எதிர்த்து விளையாட வேண்டும் என்பதே மற்ற வீரர்களுக்கு அழுத்தம்தான் என்று தெரிவித்துள்ளார்.