CSK vs RCB: சிஎஸ்கே, ஆர்சிபி பிளேயிங் 11.. தோனி குறித்த முக்கிய தகவலை சொன்ன ருதுராஜ் கெய்க்வாட்
பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு மைதானம் பொதுவாக அதிக ரன்கள் குவியும் மைதானம் என்பதால், இலக்கை துரத்துவதே சிறந்தது என ருதுராஜ் தெரிவித்தார்.
மேலும் தோனி குறித்து பேசிய அவர், "தோனி மெதுவாக காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். அவர் விளையாடத் தயாரானால் விரைவில் அணியில் இணைவார். கடந்த போட்டியில் எங்கள் பேட்டிங் சிறப்பாக இருந்தது, அதே நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறோம்" என்றார். சிஎஸ்கே அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மறுபுறம் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் கூறுகையில், "நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். ஆடுகளம் கடினமாக இருப்பதால் முதலில் பேட்டிங் செய்வதிலும் மகிழ்ச்சியே. கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 203 ரன்களைத் துரத்தி வெற்றி பெற்றது அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது. எனவே அதே ஆடும் லெவனுடன் இன்றும் களமிறங்குகிறோம்" எனத் தெரிவித்தார்.
புள்ளிவிவரங்களின்படி, ஆர்சிபி அணி சிஎஸ்கே-வுக்கு எதிராகத் தொடர்ந்து கடந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் பெங்களூரு மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த 11 போட்டிகளில் ஆர்சிபி 6 முறையும், சிஎஸ்கே 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சீசனில் ஆர்சிபி ஒரு வெற்றியுடன் வலுவாக உள்ள நிலையில், சிஎஸ்கே தனது முதல் வெற்றியைத் தேடி போராட உள்ளது.
இரு அணிகளின் ஆடும் லெவன் விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) விளையாடும் லெவன்:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, சர்பராஸ் கான், சிவம் துபே, பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் காம்போஜ், மாட் ஹென்றி, கலீல் அகமது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) விளையாடும் லெவன்:
பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், குருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி.
சென்னை சூப்பர் கிங்ஸ் (மாற்று வீரர்கள் - Impact Subs): மேத்யூ ஷார்ட், அகீல் ஹொசைன், கார்த்திக் சர்மா, ராமகிருஷ்ணா கோஷ், குர்ஜப்னீத் சிங்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (மாற்று வீரர்கள் - Impact Subs): சுயாஷ் சர்மா, ஜேக்கப் பெத்தேல், ரசிக் சலாம் தார், கனிஷ்க் சௌஹான், வெங்கடேஷ் ஐயர்.


Click it and Unblock the Notifications