சென்னை : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கான 3 முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
16 ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்த முடியாமல் தவித்து வருகிறது ஆர்சிபி அணி. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராதவ் இருவரின் அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் சிஎஸ்கே அணி முதல் போட்டியிலேயே வெற்றிபெற்று, புள்ளிக் கணக்கை தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய கேப்டனுக்கு கீழ் சிஎஸ்கே அணி முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது கூடுதல் உற்சாகத்தையும் அந்த அணிக்கு கொடுத்துள்ளது.
இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்ததற்கு 3 தவறான முடிவுகள் காரணமாக அமைந்துள்ளது. முதல் சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்தது சரியான முடிவாக பார்க்கப்பட்டாலும், ஆர்சிபி அணியின் பவுலிங்கை மனதில் வைத்து கேப்டன் டூ பிளஸிஸ் முடிவு எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆர்சிபி அணியின் பவுலிங்கை காட்டிலும் பேட்டிங் பலம் வாய்ந்ததாகும்.
அதேபோல் டாப் ஆர்டரில் 3 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போது, விராட் கோலியை அவசரப்படாமல் 20 ஓவர்கள் முழுவதுமாக விளையாட அறிவுறுத்தி இருக்க வேண்டும். அவரையும் அட்டாக் செய்ய வைத்து அவுட்டானது கூடுதல் பின்னடைவாக மாறியது. அதேபோல் ஸ்பின்னர்களுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் மயங்க் டாகரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.
ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் வீசலாம் என்று அறிவித்த பின், வேகப்பந்துவீச்சாளர்களும் ஷார்ட் பால்களை நம்பியே களமிறங்கியது ஆர்சிபி அணி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. யார்க்கர் பந்துகளை கூட வீசாமல், கடைசி வரை அனைவரும் ஷார்ட் பால்களையே வீசி சிவம் துபேவுக்கு ஷார்ட் பால் பயிற்சி கொடுப்பது போல் ஆட்டம் அமைந்தது. இதனை அடுத்தடுத்த போட்டிகளில் சரி செய்யவில்லை என்றால், மீண்டும் ஈசாலா கப் நம்தே என்று ரசிகர்களும் புலம்ப வேண்டியது தான்.