சென்னை : ஆர்சிபி அணியின் இளம் பவுலரான வைஷாக் விஜய்குமார் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாக அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன்னான சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. மகளிர் பிரிமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணி கோப்பை வென்றுள்ள நிலையில், ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதே எனர்ஜியுடன் ஆர்சிபி ஆடவர் அணியும் நிச்சயம் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

இருப்பினும் ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் பவுலிங் தான் பிரச்சனையாக உள்ளது. ஏனென்றால் சிராஜை தவிர்த்து சொல்லிக் கொள்ளும்படி நல்ல பவுலர்கள் இல்லை. குஜராத் அணிக்காக கடந்த சீசன்களில் விளையாடிய யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப் மற்றும் ஃபெர்குசன் ஆகியோரை ஆர்சிபி அணி வாங்கியுள்ளது. அதேபோல் ஸ்பின்னர்களில் கரண் சர்மா மற்றும் மயங்க் டாகர் மட்டுமே உள்ளனர்.
இதனால் சேப்பாக்கம், லக்னோ, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட மைதானங்களில் ஆர்சிபி அணி வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பவுலிங் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூட்யூப் சேனலில், அண்மையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியை நேரில் பார்த்தேன்.

சேப்பாக்கம் மைதானம் கொஞ்சம் பிளாட் பிட்சாக இருந்தாலும், நல்ல பவுன்ஸ் இருந்தது. அப்போது கர்நாடகா அணிக்காக ஆடிய வைஷாக் விஜய்குமார் மிரட்டலாக பவுலிங் செய்தார். உயிரை கொடுத்து விளையாடும் வீரராக தெரிகிறார். 4 நாட்களும் அப்படியொரு பவுலிங் விஜய்குமார் வெளிப்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது. அதேபோல் கேபிஎல் லீக்கிலும் அசத்தி இருக்கிறார்.
அனுபவமில்லை என்றாலும் ஆர்சிபி அணிக்காக அவர் நன்றாக செயல்படுவார் என்று தோன்றுவதாக தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் 7 போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கிய வைஷாக் விஜய்குமார், 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஞ்சி டிராபி தொடரில் கர்நாடகா அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ள அவர், இந்த சீசனில் அனைவரின் கவனத்தையும் திருப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.