சென்னை : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வெல்வதற்கு ஆர்சிபி அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அந்த அணியின் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்துள்ளது. 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆர்சிபி அணி, தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் அதிரடியால் 173 ரன்களை குவித்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து 50 பந்துகளில் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், இந்த சீசனில் முதல் போட்டியிலேயே ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதிலும் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் தினேஷ் கார்த்திக் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். முதல் பேட்டிங் செய்த பின் தினேஷ் கார்த்திக் பேசுகையில், கடைசி ஓவர் வரைக்கும் எனது பேட்டிங் ஃபார்மை கண்டறிய முயற்சி செய்தேன். எனது பேட்டில் இருந்து வந்த ஷாட்கள் இன்னும் சரியாக கனெக்ட்டாகவில்லை.
இன்னும் கடினமாக முயற்சிக்க வேண்டும். மிடில் ஓவர்களில் சிஎஸ்கே அணி எங்களை பிரஷரில் தள்ளிவிட்டது. அதன்பின் இளம் வீரரான அனுஜ் ராவத்துடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தேன். இந்த பிட்சில் நன்றாக பேட்டிங் செய்ய முடிகிறது. இரண்டாவது பேட்டிங்கிற்கும் சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்களுக்கு ஸ்கோர் சராசரியானது தான். அதனால் ஆர்சிபி வீரர்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டை கொடுத்தது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அதனை கடைசி ஓவர்களில் சிக்சர்களை அடித்து சரி செய்ய முயற்சித்தோம். இந்த பிட்சில் 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். அதனால் எங்களின் ஃபீல்டிங் நிச்சயம் ஒரு படி மேல் இருக்க வேண்டும். அதனால் நான் ஃபீல்டிங் செய்ய வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். அது ஆர்சிபி அணிக்கு நன்மையை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.