சென்னை : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற 174 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து பலம் வாய்ந்த ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். சேப்பாக்கம் மைதானத்தில் முதல் பேட்டிங் விளையாடுவது கொஞ்சம் சாதகமாக இருக்கும் என்பதால், டூ பிளஸிஸ் இந்த முடிவை எடுத்தார். இதையடுத்து ஆர்சிபி அணி தரப்பில் டூ பிளஸிஸ் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

தீபக் சஹர் வீசிய 3வது ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகளை விளாசி டூ பிளஸிஸ் அதிரடியை தொடங்கினார். இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், முஷ்டாஃபிசுர் ரஹ்மான் வீசிய ஓவரில் டூ பிளஸிஸ் 35 ரன்களிலும், தொடர்ந்து வந்த ரஜத் பட்டிதர் டக் அவுட்டாகியும் வெளியேறினர். தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லும் தீபக் சஹர் பவுலிங்கில் டக் அவுட்டாகி வெளியேற, ஆர்சிபி அணி 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த விராட் கோலி - கேமரூன் க்ரீன் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. விராட் கோலி திடீரென தீக்சனாவை அட்டாக் செய்ய, உடனடியாக ஜடேஜாவை வைத்து சிஎஸ்கே அணி ஆட்டத்தை கட்டுக்குள் வைத்தது. இதனால் 11 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் அட்டாக் செய்ய முடிவு செய்த விராட் கோலி, முஷ்டாஃபிசுர் ரஹ்மான் பவுலிங்கில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து ரஹானேவின் அற்புதமான ஃபீல்டிங்கால் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதே ஓவரில் கேமரூன் க்ரீனும் 22 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் 75 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி அணி தடுமாறியது. அப்போது இளம் வீரர் அனுஜ் ராவத் - தினேஷ் கார்த்திக் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் கவனமாக விளையாடி ஆர்சிபி அணியின் ஸ்கோரை 15 ஓவர்கள் முடிவில் 102 ரன்களாக உயர்த்தினர். அதன்பின் இவர்கள் இருவரும் அதிரடிக்கு கியரை மாற்றினர். தீக்சனா வீசிய 16வது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை விளாசி மொத்தமாக 14 ரன்களை சேர்த்தார்.
தொடர்ந்து 18வது ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே பவுலிங்கில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்கள் விளாசப்பட்டது. முஷ்டாஃபிசுர் ரஹ்மான் வீசிய 19வது ஓவரிலும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 16 ரன்கள் விளாசப்பட்டது. இதையடுத்து கடைசி ஓவரை வீச துஷார் தேஷ்பாண்டே மீண்டும் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 3 ஒய்டுகள் உட்பட மொத்தமாக 9 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி பந்தில் அனுஜ் ராவத் 48 ரன்களில் தோனியால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 38 ரன்களை விளாசினார்.