பெங்களூர்: சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக அடைந்து வரும் தோல்வியால் யாருக்கும் எந்த அச்சமும் இல்லை என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மைக் ஹசி அறிவுறுத்தியுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னர்கள் சிறப்பாக தயாராகி வருகிறார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவை ஆர்சிபி அணி பறித்தது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதன் காரணமாக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணியிடம் அடைந்த தோல்விக்கு சிஎஸ்கே அணி பழிதீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சிஎஸ்கே அணி மோசமான ஃபார்மில் இருந்தாலும், கடந்த சில சீசன்களாக கடுமையாக சவால் அளித்து வருகின்றனர். ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ் ஆகியோரின் ஆட்டம் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறினாலும், சிஎஸ்கே அணி எந்தவித அழுத்தத்திலும் இல்லை. இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பேசுகையில், சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை அடைந்து வருவதால், நாங்கள் ஒருபோதும் அச்சம் கொள்ளப் போவதில்லை.
தோல்விக்கு பயந்து அதிக அழுத்தத்தையும் எடுத்து கொள்ளப் போவதில்லை. ஏனென்றால் ஒரு சீசன் மோசமாக அமைந்ததால், எதுவும் மாறிவிடாது. நிச்சயம் வரும் போட்டிகளில் சில தவறுகளை செய்யாமல், சரி செய்வோம். சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது என்பதை அறிவேன். இந்த சீசனில் அதிக போட்டிகளை நாங்கள் வெல்லவில்லை.
அதற்காக எதிர்காலம் குறித்து சிந்திக்க தேவையில்லை. எங்கள் அணியில் சில மேட்ச் வின்னர்களை உருவாக்கி வருகிறோம். அதனால் இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு எதிராகவும் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இந்த சீசனில் இளம் வீரர்கள் விளையாடுவதற்கு சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது.
அதனால் இளம் வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை நிச்சயம் பயன்படுத்தி கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த சீசனில் சிறப்பாக விளையாடினால், அடுத்தடுத்த சீசன்களில் தொடர்ந்து விளையாடுவார்கள். இங்கிருந்து சில போட்டிகளில் வென்றால், இந்த சீசனின் முடிவில் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.