சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தோனி சூசகமாக ஏற்கனவே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "புதிய சீசனில் புதிய ரோலில் செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் குழப்பமடைந்தனர். கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டாரா அல்லது ஆலோசகராக பணியாற்ற உள்ளாரா என்று கேள்விகள் எழுந்தன.

இன்னும் சிலரோ, பேட்டிங் ஆர்டரில் தோனி முதல் 4 இடங்களில் விளையாடுவார் என்றும் கூறி வந்தனர். இதுவொரு ஒரு பக்கம் இருக்க, ரசிகர்கள் சில இது வெறும் விளம்பரத்திற்காக என்று விமர்சித்தனர். இந்த நிலையில் தோனியின் புதிய ரோல் என்ன என்பது குறித்து தெரிய வந்தது. ஜியோ சினிமாஸ் தரப்பில் தோனி இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஐபிஎல் ப்ரோமோ வெளியாகியது.
இதன் மூலம் தோனி எந்த புதிய ரோலிலும் இந்த சீசனில் விளையாடவில்லை என்றும், கேப்டன்சியில் தொடர்கிறார் என்றும் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். இந்த நிலையில் ஓராண்டுக்கு பின் தோனியை சேப்பாக்கம் மைதானத்தில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்குவதாக அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நாளை ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், கேப்டன்கள் பங்கேற்ற போட்டோஷூட்டில் சிஎஸ்கே அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம், சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சிஎஸ்கே அணியில் ஜடேஜா, ரஹானே, மொயின் அலி உள்ளிட்ட ஏராளமான சீனியர் வீரர்கள் இருக்கும் சூழலில், இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாடை கேப்டனாக நியமனம் செய்துள்ளது. இதனிடையே தோனி என்ன ரோலில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இன்பேக்ட் பிளேயராக மட்டுமே தோனி விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் தோனி களமிறங்குவாரா என்ற ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.