CSK vs RCB: "தோனி அடித்த சிக்ஸரால் மோசமான மனநிலைக்கு சென்றேன்".. உண்மையை உடைத்த யாஷ் தயாள்
பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியாக நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான மோதலில் கடைசி ஓவரில் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தார் பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள். அதன் மூலம் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை பறித்தார்.
2023 ஐபிஎல் தொடரின் போது கடைசி ஓவரில் இவரது பந்துவீச்சில் தான் ரிங்கு சிங் ஐந்து சிக்ஸ் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்திருந்தார். ஆனால், தற்போது சிறப்பாக பந்துவீசி பெங்களூரு அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 218 ரன்கள் எடுத்த நிலையில் சிஎஸ்கே அணி 201 ரன்கள் எடுத்தாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கே அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் என்ற நிலை இருந்தது.
அப்போது தோனி களத்தில் இருந்தார். கடைசி ஓவர்களில் சிக்ஸ் அடிப்பதில் உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் தோனி தான். எனவே, யாஷ் தயாள் பதற்றத்துடன் முதல் பந்தை வீசினார். தோனி 110 மீட்டருக்கு இமாலய சிக்ஸர் ஒன்றை அடித்தார். அதற்கு அடுத்த பந்திலேயே தோனியின் விக்கெட்டை வீழ்த்திய தயாள் அடுத்த 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார்.
இதன் மூலம் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சிஎஸ்கே அணி இன்னும் 10 ரன்கள் எடுத்திருந்தால் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கும். இந்த நிலையில் தனது கடைசி ஓவர் பந்துவீச்சு குறித்து யாஷ் தயாள் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
"நான் அப்போது பதற்றத்துடன் இருந்தேன். ஆனாலும் எனது நோக்கம் நல்ல பந்துகளை வீச வேண்டும் என்பதாக இருந்தது. மூத்த வீரர்கள் என்னை சுற்றி இருந்தார்கள். அவர்களின் ஆதரவு எனக்கு இருந்தது. நான் இந்த போட்டியின் மிக முக்கியமான ஓவரை வீசினேன். அதுவும் கடைசி ஓவர். தோனியின் விக்கெட் தான் இந்த போட்டியின் திருப்புமுனை என எனக்கு தோன்றுகிறது. முதல் பந்தில் அவர் சிக்ஸ் அடித்தபோது நான் மனதளவில் மோசமான நிலைக்கு சென்றேன் (ரிங்கு சிங் 5 சிக்ஸர்கள் அடித்த சம்பவத்தை குறிப்பிட்டார்). ஆனால், எனக்கு நானே ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டேன். நான் நன்றாக தான் பந்து வீசினேன் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஸ்கோர் போர்டை பார்ப்பதை விட நல்ல பந்துகளை வீசுவதில் கவனம் செலுத்தினேன்" என்றார் யாஷ் தயாள்.


Click it and Unblock the Notifications