கவுகாத்தி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி மீண்டும் விமர்சனத்தை பெற்று வருகிறது. 3 ஸ்பின்னர்களில் ஜடேஜாவுக்கு முழுமையாக 4 ஓவர்களை கொடுக்காமல் தவிர்த்ததோடு, நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடும் போது நூர் அஹ்மத்தை தாமதமாக அட்டாக்கிற்கு கொண்டு வந்தது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கு முன்பாகவே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஸ்பின்னர்களை சிறப்பாக பயன்படுத்த தவறி வருவதாக விமர்சித்திருந்தோம். அந்த வகையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி விமர்சனத்தை பெற்று வருகிறது.

8வது ஓவருக்கு வந்த நூர்
இந்த போட்டியில் அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே நிதிஷ் ராணா அடுத்தடுத்து 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி தள்ளினார். இதன்பின் உடனடியாக நூர் அஹ்மத்தை அட்டாக்கில் கொண்டு வராமல், 8வது ஓவரில் தான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அவர் வீசிய 2வது ஓவரிலேயே சஞ்சு சாம்சன் விக்கெட் வீழ்த்தப்பட்ட நிலையில், அவருக்கு 2 ஓவர்களுடன் நிறுத்தினார்.
தாமதமாக வந்த ஜடேஜா
அதேபோல் வழக்கமாக பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்ததும் ஜடேஜா பவுலிங் அட்டாக்கில் கொண்டு வரப்படுவார். ஆனால் இடதுகை பேட்ஸ்மேனான நிதிஷ் ராணா பேட்டிங்கில் அதிரடியாக ஆடி வந்ததால், அவர் 12வது ஓவரிலேயே அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். இதன் பின் அவர் மீண்டும் ஹெட்மயர் களத்தில் இருந்த போது, பவுலிங் செய்ய அழைக்கப்படவில்லை.
2 ஓவர்கள்
இடதுகை பேட்ஸ்மேன்களை ஜடேஜா ஏராளமான முறை வீழ்த்தி இருக்கும் நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தயக்கம் காட்டியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 3 ஸ்பின்னர்கள் அஸ்வின் மற்றும் நூர் அஹ்மத் ஆகிய இருவர் மட்டுமே தங்களது 4 ஓவர்களை வீசி இருக்கின்றனர். ஆனால் ஜடேஜா வெறும் 2 ஓவரை மட்டுமே வீசி இருக்கிறார்.
பவர் பிளே முடிவுகள்
அதேபோல் பவர் பிளே ஓவர்களில் கலீல் அஹ்மத் தவிர்த்து மாற்று பவுலர்களை தேர்வு செய்வதிலும் ருதுராஜ் மோசமான தேர்வுகளை செய்கிறார். அஸ்வின் பவர் பிளே ஓவர்களில் பவுலிங் செய்த அனுபவம் இருந்தாலும், நூர் அஹ்மத்தை கொஞ்சம் முன்பாகவே அட்டாக்கில் கொண்டு வந்து முயற்சிக்கலாம். பவர் பிளே மற்றும் மிடில் ஓவர்களில் நூர் அஹ்மத்தை பயன்படுத்தும் வகையில் திட்டமிடுவது நல்லது.
ஓய்வறை திட்டங்கள்
அதுமட்டுமல்லாமல் ஓய்வறையில் கொடுக்கும் திட்டங்களிலேயே ருதுராஜ் கெய்க்வாட் அதிகமாக பயணிக்கிறார் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் பிட்ச் மற்றும் சூழலுக்கு ஏற்ப, பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப களத்தில் திட்டங்களை மாற்ற வேண்டும். அதில் ருதுராஜ் கெய்க்வாட் பின் தங்கி இருக்கிறார். இதனை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், சிஎஸ்கே அணி நிச்சயம் சோதனைகளை சந்திக்கும்.