சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் 61-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ராஜஸ்தான் அணி குறைவான ஸ்கோர் எடுத்த போதும் சாஹல், அஸ்வின் போன்ற சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து சிஎஸ்கே அணியை வீழ்த்தி விடலாம் என திட்டம் போட்டார் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். ஆனால், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நங்கூரம் போட்டது போல நின்று நிதான ஆட்டம் ஆடி சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தார்.
இந்த போட்டி நடந்த சேப்பாக்கம் மைதானத்தில் பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 அவர்களின் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ரியான் பராக் 35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். ஜெய்ஸ்வால் 24, ஜுரேல் 28, ஜோஸ் பட்லர் 21, சஞ்சு சாம்சன் 15 ரன்கள் எடுத்திருந்தனர். சிஎஸ்கே அணியின் சிமர்ஜீத் சிங் அபாரமாக பந்து விசி 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அடுத்து சிஎஸ்கே அணி 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சேஸிங் செய்ய தொடங்கியது. இந்த பிட்ச்சில் விக்கெட்கள் எளிதாக பறி போகும் என்பதால் சிஎஸ்கே அணி திட்டமிட்டு சேஸிங் செய்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிலையாக ஒரு புறம் நின்று ஆடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டம் ஆடினர்.
ருதுராஜ் கெய்க்வாட் துவக்கம் முதல் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 41 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். டேரில் மிட்செல் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் ருதுராஜ் ஒரு பக்கம் நிலையாக நின்று ஆடியதால் சிஎஸ்கே அணி இந்த சேஸிங்கை அழுத்தம் இன்றி செய்து முடித்தது. 18.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இதன் மூலம் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் ஒரு படி முன்னேறி உள்ளது.