கவுஹாத்தி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார். இதன் காரணமாக தொடர்ந்து 3வது போட்டியாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கிட்டத்தட்ட தொடக்க வீரரை போல் 2வது ஓவருக்குள் களத்திற்கு வந்திருப்பது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 5 முறை கோப்பையை வென்றதற்கும், ஆதிக்கம் செலுத்தியதற்கு அந்த அணியின் தொடக்க வீரர்கள் முக்கியமான காரணம். ஹெய்டன், மைக் ஹசி, முரளி விஜய், மெக்கல்லம், டுவைன் ஸ்மித், டூ பிளசிஸ், ஷேன் வாட்சன், ருதுராஜ் கெய்க்வாட், கான்வே என்று தரமான வீரர்கள் தொடக்க வீரர்களாக இருந்திருக்கின்றனர்.

ஆனால் இம்முறை சிஎஸ்கே அணியின் தொடக்க கூட்டணி கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3 வரிசையில் களமிறக்கப்பட்டு வருகிறார். இதனால் ரச்சின் ரவீந்திரா - ராகுல் திரிப்பாட்டி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் களமிறங்கிய நிலையில், ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே ரச்சின் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
இதனால் முதல் ஓவரிலேயே ருதுராஜ் கெய்க்வாட் களத்திற்கு வந்துள்ளார். கடந்த 2 போட்டிகளிலும் சிஎஸ்கே அணியின் நிலைமை இப்படிதான் இருந்தது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் திரிப்பாட்டி 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதேபோல் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
இந்த 2 போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் 2 ஓவர்களுக்குள் களத்திற்கு வந்ததை போல், தொடர்ச்சியாக 3வது போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் களத்திற்கு வந்துள்ளார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராகவே களமிறங்கிவிடலாம் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதனால் சிஎஸ்கே அணியின் தொடக்க கூட்டணியை மாற்ற வேண்டும் என்று புலம்பி வருகின்றனர்.
ஆனால் ஐபிஎல் மெகா ஏலத்தின் போதே சிஎஸ்கே அணியின் தொடக்க கூட்டணியை முடிவு செய்துவிட்டதாக பயிற்சியாளர் ஃபிளம்மிங் கூறி இருந்தார். இதனால் இந்த சீசனில் ரச்சின் ரவீந்திரா - ராகுல் திரிப்பாட்டி கூட்டணியை மாற்றுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் அழுத்தத்துடனேயே களத்திற்கு வர வேண்டிய சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.