கவுஹாத்தி: ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய நிதிஷ் ராணா 36 பந்துகளில் 81 ரன்களை விளாசினார்.
இதன்பின் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 63 ரன்களை சேர்த்தார். ஆனால் அவருக்கு உறுதுணையாக வேறு எந்த பேட்ஸ்மேனும் அதிரடியாக விளையாடவில்லை.

ருதுராஜ் கருத்து
இதனால் சிஎஸ்கே அணி தொடர்ந்து 2வது தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், ராஜஸ்தான் அணியின் நிதிஷ் ராணா பவர் பிளேவில் சிறப்பாக விளையாடினார். அவர் ஸ்கொயர் திசையில் ரன்களை குவித்து கொண்டே இருந்தார். அதனை தடுக்க நாங்கள் தவறிவிட்டோம். அவரை கால்களை முன்வைத்து ஆட வைத்திருக்க வேண்டும்.
பவுலிங் சிறப்பு
அதேபோல் 8 முதல் 10 ரன்களை மோசமான ஃபீல்டிங் காரணமாக விட்டுக் கொடுத்துவிட்டோம். இங்கிருந்து முன்னேறி செல்ல விரும்புகிறோம். நிச்சயமாக 180 ரன்கள் இலக்கு எட்டக் கூடிய ஒன்றுதான். இது நல்ல பிட்சாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸில் முடிவடைந்த போது மகிழ்ச்சியாகவே இருந்தேன். ஏனென்றால் 210 ரன்கள் வரை செல்லும் என்று நினைத்திருந்தோம். ஆனால் 180 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருந்தோம்.
மிடில் ஆர்டரில் வருவது ஏன்?
கடந்த சில ஆண்டுகளாக ரஹானே நம்பர் 3லும், மிடில் ஓவர்களிலும் அம்பாதி ராயுடுவும் பார்த்து கொண்டனர். அதனால் இந்த சீசனில் நான் கொஞ்சம் தாமதமாக பேட்டிங் செய்ய வந்தால் சரியாக இருக்கும் என்று கருதினோம். ஏனென்றால் ராகுல் திரிப்பாட்டி ஆக்ரோஷமாக ஆடக் கூடிய பேட்ஸ்மேன். ஆனால் அதைப்பற்றி பேச தேவையில்லை. ஏனென்றால் கடந்த 3 போட்டிகளாக 2வது ஓவருக்குள் களத்திற்கு வந்துவிடுகிறேன்.
பேட்டிங்கில் தொடரும் சிக்கல்
இந்த முடிவு மெகா ஏலத்தின் போதே எடுத்துவிட்டோம். அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. என்னால் ரிஸ்க் எடுத்தும், ஸ்ட்ரைக்கை மாற்றியும் விளையாட முடியும். கடந்த 3 போட்டிகளிலும் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அது கிடைத்துவிட்டால், ஆட்டமே வேறு மாதிரி இருக்கும். நூர், கலீ, ஜடேஜா சிறப்பாக பவுலிங் செய்தனர். பவுலிங் யூனிட் சிறப்பாக செயல்படுகிறார்கள். 3 துறைகளிலும் சிறப்பாக செயல்படும் போது, வெற்றி எங்களை வந்துசேரும் என்று தெரிவித்துள்ளார்.