சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடி வரும் போட்டியை காண்பதற்கு நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அஜித் குமார், ஷாலினி, அவரது மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் சேப்பாக்கம் மைதானத்தில் அமர்ந்து சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்து வருவது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தோல்விகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் வாழ்வா சாவா தருணத்தில் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கி இருக்கிறது. இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி வரும் சிஎஸ்கே அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் டைம் அவுட் எடுத்த போது, கேமரா சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த நடிகர் அஜித் குமார் பக்கம் திரும்பியது. இதனால் ஒட்டுமொத்த சேப்பாக்கம் மைதானமும் அதிர்ந்தது என்றே சொல்லலாம். நடிகர் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தனர்.
இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் தல தோனியை பார்க்க வந்த ரியல் தல அஜித் குமார் என்று கொண்டாடி வருகின்றனர். அவருடன் குட்டி தளபதியான சிவகார்த்திகேயனும் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார். அதேபோல் நடிகை ஸ்ருதிஹாசனும் மைதானத்திற்கு வந்திருந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதற்கேற்ப சிஎஸ்கே அணியும் அதிரடியாக ரன்களை குவித்து வருகிறது.
அண்மையில் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அப்போது கார் ரேஸிங்கில் ஈடுபட்டிருந்த அஜித் குமார், தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வரும் அஜித் குமார், திடீரென சிஎஸ்கே போட்டியை பார்க்க வந்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.