சென்னை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா காயம் அடைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பதிரானாவுக்கு பதிலாக நேதன் எல்லீஸ் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பதிரானாவின் காயம் குறித்து அணி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி என்று 4 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேபோல் ஐதராபாத் அணியும் 9 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை அடுத்தடுத்து இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோரை தொடர்ந்து அடுத்ததாக டிவால்ட் பிரெவிஸ் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல் சிஎஸ்கே அணிக்குள் நடந்த பயிற்சி ஆட்டத்தில் வன்ஷ் பேடியும் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்து காட்டியுள்ளார்.
இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில் தோனி யார் யாருக்கு வாய்ப்பு அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிரானா காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பதிரானா காயம் காரணமாக விளையாடவில்லை.
அதேபோல் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியிலும் பேட்டிங் சொதப்பலால் களமிறக்கப்படவில்லை. இந்த நிலையில் பதிரானா காயம் அடைந்திருப்பது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஐதராபாத் அணியின் அதிரடி வீரரான கிளாசன் விக்கெட்டை 22 பந்துகளில் 3 முறை வீழ்த்தி இருக்கிறார்.
ஐதராபாத் அணியை பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் எந்த நேரத்தில் அதிரடி காட்டும் என்பதை கணிக்கவே முடியாது. இதனால் பதிரானாவின் துல்லியமான யார்க்கர் பந்துகள் இல்லாமல் எப்படி சிஎஸ்கே அணி கட்டுப்படுத்தும் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அதேபோல் இவரது இடத்தில் நேதன் எல்லீஸ் களமிறங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.