சென்னை: சிஎஸ்கே அணியின் பெரும்பாலான வீரர்களின் ஆட்டம் மோசமாக இருப்பதாக கேப்டன் தோனி கடுமையாக விமர்சித்துள்ளார். டிவால்ட் பிரெவிஸ் சிறப்பாக ஆடியதாக பாராட்டிய தோனி, இப்படியே அனைத்து போட்டிகளிலும் பிளேயிங் லெவனை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்றும் சாடியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது.

இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக ஐதராபாத் அணி வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.
இந்த தோல்விக்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசுகையில், சிஎஸ்கே அணி பேட்டிங்கின் போது சீரான இடைவேளையில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. அதேபோல் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு நன்றாகவே இருந்தது. இதனால் 154 ரன்கள் என்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாத ஸ்கோராகும். இந்த பிட்சில் பெரிதாக டர்ன் இல்லை.
சிஎஸ்கே பவுலிங் செய்யும் போது நிச்சயம் பிட்ச்சில் உதவி இருந்தது. அதற்கேற்ப எங்களின் ஸ்பின்னர்கள் சிறப்பாக பவுலிங் செய்தார்கள். சரியான இடங்களில் பிட்ச் செய்தார்கள். ஆனால் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். டிவால்ட் பிரெவிஸ் சிறப்பாக பேட்டிங் செய்தார். எங்களின் மிடில் ஆர்டரில் அப்படியொரு வீரருக்கான தேவை இருந்தது.
மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. அதனை பிரெவிஸ் சரியாக செய்தார். ஆனால் இன்னும் மிடில் ஓவர்களில் முன்னேற்றம் அடைய வேண்டிய தேவை உள்ளது. இதுபோன்ற தொடர்களில் ஒன்று அல்லது இரு ஓட்டைகளை அடைக்க முடியும். ஆனால் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை.
இதனால் தொடர்ந்து மாற்றங்கள் செய்து கொண்டே செல்ல முடியாது. சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய போட்டிகளில் நல்ல இலக்கை எட்டவில்லை என்று காட்டமாக தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் பெரும்பாலான வீரர்களை தோனி கடுமையாக விமர்சித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.