சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவின் இளம் வீரரான டிவால்ட் பிரெவிஸ் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சிஎஸ்கே அணியின் இளம் வீரர்களுக்கு இடையில் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி ஆட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அதனை பயிற்சியாளர் ஃபிளமிங் ஒவ்வொரு வீரரின் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்து உள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் நிலை திண்டாட்டமாக இருக்கிறது. ஏனென்றால் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. ஐதராபாத் அணி அடுத்தடுத்து மோசமான தோல்விகளை அடைந்த போதும், சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் இருப்பது ரசிகர்களாலும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் ஆயுஷ் மாத்ரேவை போல் இன்னும் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் முடிவு செய்துள்ளார். அதற்கேற்ப இளம் வீரர்களை தயார் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு இடையே பயிற்சி போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, சீனியர் வீரர்களான ஜடேஜா, அஸ்வின், சிவம் துபே, கலீல் அஹ்மத் மற்றும் நூர் அஹ்மத் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் பயிற்சி ஆட்டம் நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் வன்ஷ் பேடி, ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீத், விஜய் சங்கர், டிவால்ட் பிரெவிஸ், சாம் கரண், ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்டோர் விளையாடி இருக்கின்றனர். அதிலும் டிவால்ட் பிரெவிஸ் விளையாடியதை பயிற்சியாளர் ஃபிளமிங், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி உள்ளிட்டோர் தீவிரமாக கண்காணித்திருக்கின்றனர்.
ஏனென்றால் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு 7 முதல் 15 ஓவர்கள் வரை பவுண்டரி, சிக்ஸ் அடிக்க முடியாததே முக்கிய காரணமாக உள்ளது. அந்த கட்டத்தில் விளையாட சிவம் துபே மட்டுமே இருக்கிறார். இதனால் எதிரணிகள் சிவம் துபேவை கட்டுப்படுத்த எளிதாக முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு வருகிறார்கள்.
இதனால் அவராலும் போதுமான அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இவருக்கு உறுதுணையாக வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்யக் கூடிய ஒரு பேட்ஸ்மேனை சிஎஸ்கே அணி கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டது. அதன் காரணமாகவே டிவால்ட் பிரெவிஸ் இந்த சீசனுக்கு நடுவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் நாளைய ஆட்டத்தில் ஜேமி ஓவர்டனுக்கு பதில் டிவால்ட் பிரெவிஸ் வருவார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் திட்டங்களிலும் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதிரானா மற்றும் நூர் அஹ்மத் ஆகியோர் அட்டாக்கில் முன்னதாகவே கொண்டு வரப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.