CSK vs SRH: சேப்பாக்கத்தில் சிஎஸ்கே போராட்டம்.. 180 ரன்கள் குவிக்க காரணமே பேபி ஏபி, கார்த்திக் தான்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் 63-வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அதிரடியாகத் தொடங்கிய சிஎஸ்கே அணி, இடையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் மிக மந்தமான ஆட்டத்தால் தடுமாறினாலும், இறுதியில் டெவால்ட் பிரெவிஸின் அதிரடியால் கௌரவமான ஸ்கோரை எட்டியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரராகக் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். 13 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். ஆனால், மறுபுறம் நங்கூரம் பாய்ச்சியது போல நின்ற கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எடுக்க முடியாமல் திணறினார்.

ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளைச் சந்தித்து வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 71.43 ஆக இருந்தது டி20 கிரிக்கெட்டில் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. அவருக்குப் பின் வந்த உர்வில் படேல் 13 ரன்களில் வெளியேற, கார்த்திக் சர்மா 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அணியை மீட்க முயன்றார்.
சிஎஸ்கே அணியின் ஸ்கோரை உயர்த்தியது 'பேபி ஏபி' என்று அழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸ் தான். அவர் 27 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசினார். இறுதியில் சிவம் துபே 26 ரன்கள் சேர்க்க, சிஎஸ்கே அணி 180 ரன்களை எட்டியது. பவர்பிளே ஓவர்களில் 57 ரன்கள் எடுத்த சிஎஸ்கே அணி, மிடில் ஓவர்களில் ருதுராஜின் நிதான ஆட்டத்தால் ரன் வேகத்தைக் குறைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது.
ஹைதராபாத் பந்துவீச்சு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் அபாரமாகப் பந்துவீசினார். அவர் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து ருதுராஜ், சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மா என 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஈஷன் மலிங்கா 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். சாகிப் உசேன் 2 விக்கெட்டுகளைப் பெற்றார்.


Click it and Unblock the Notifications