CSK vs SRH: "அந்த 2 ஓவர்கள் தான் தோல்விக்கு காரணம்".. சிஎஸ்கே தோற்ற பிறகு கேப்டன் ருதுராஜ் புலம்பல்
ஹைதராபாத்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, வெற்றியை நூலிழையில் நழுவவிட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி எளிதாக வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆட்டத்தின் நடுப்பகுதியில் நடந்த அந்த ஒரு விஷயம் தான் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது. அது குறித்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டி முடிந்தவுடன் பேசினார்.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் 59 ரன்களும், ஹென்ரிச் கிளாசன் 39 பந்துகளில் 59 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே தரப்பில் அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "நிச்சயமாக 195 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் எட்டக்கூடிய இலக்கு தான். ஹைதராபாத் அணி பவர்பிளே ஓவர்களில் ஆடிய விதத்தைப் பார்த்தபோது அவர்கள் 220 அல்லது 230 ரன்கள் வரை எடுப்பார்கள் என்று தோன்றியது. ஆனால் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு ஸ்கோரைக் கட்டுப்படுத்தினர். 200 ரன்களுக்குக் கீழே எந்த இலக்கையும் துரத்திப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.
ஆட்டத்தின் 10 ஓவர்கள் முடிந்த நிலையில், நாங்கள் 4 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தோம். கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. வெற்றிக்கு இன்னும் 80 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்தச் சூழலில் ஒரு சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் அதற்கு அடுத்த 2 ஓவர்களில் நாங்கள் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அந்த இடத்தில்தான் ஆட்டத்தின் வேகம் எங்கள் கையை விட்டுப் போனது. கடைசி ஓவர்களில் ஓவருக்கு 12 அல்லது 13 ரன்கள் எடுப்பது எப்போதும் கடினமானது. ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் இறுதியில் மிகச் சிறப்பாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினர்.
கடந்த மூன்று போட்டிகளாகவே எங்களது பந்துவீச்சுப் படை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அபிஷேக் ஷர்மா தொடக்கத்தில் மிரட்டினாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தனர். குறிப்பாக அன்ஷுல் கம்போஜ் அபாரமாகச் செயல்பட்டு வருகிறார். அவர் தனது பந்துவீச்சில், குறிப்பாக டெத் ஓவர்களில் கடினமாக உழைக்கிறார். ஒரு கேப்டனாக அவரிடம் பேசும்போது, தனக்கு என்ன வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். இத்தகைய வீரர்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது. 10 ஓவர்களில் வலுவான நிலையில் இருந்தும், ஆட்டத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட மந்தமான ரன் குவிப்பே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சஞ்சு சாம்சன் 7 ரன்களிலும், ருதுராஜ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், காயத்துடன் போராடிய ஆயுஷ் மத்ரே 30 ரன்கள் சேர்த்தார். இந்தத் தோல்வி சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பிற்குச் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications