CSK vs SRH: தோனி ஆடுகிறாரா? சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் போட்டியின் டாஸ், பிளேயிங் 11 விவரம்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் 2026 ஐபிஎல் லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தோனி ஆடுவது குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அவர் மைதானத்தில் இருக்கிறார் ஆனால் போட்டியில் ஆடும் அளவுக்கு உடற்தகுதி பெறவில்லை என்றார். அது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

பிளே-ஆப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் இந்த மிக முக்கியமான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிஎஸ்கே அணி, பேட்டிங் தேர்வு செய்தது. அதே சமயம் தோனி ஆடவில்லை.
ஏமாற்றமளித்த தகவல்
மைதானம் முழுவதும் 'தோனி... தோனி...' என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்த நிலையில், ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றம் அளிக்கும் அந்த தகவலை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அறிவித்தார். டாஸ் வென்ற பிறகு தோனி விளையாடுகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ருதுராஜ், "எம்.எஸ்.தோனி இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. அதனால் அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. ஒருவேளை இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால், அகமதாபாத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாகவே தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்கள் பரவியதால், அவர் நிச்சயம் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் எனச் சேப்பாக்கத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும், இதுவே சேப்பாக்கத்தில் இந்த ஆண்டு சிஎஸ்கே ஆடும் கடைசி போட்டி என்பதால் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், ருதுராஜின் இந்த அறிவிப்பு ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், தோனி டக்-அவுட்டில் அமர்ந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
ஆடுகளம் மற்றும் மாற்றங்கள்
ஆடுகளம் குறித்துப் பேசிய ருதுராஜ், பிட்ச் மிகவும் உலர்ந்த நிலையில் காணப்படுவதால் முதலில் பேட்டிங் செய்வது சரியாக இருக்கும் எனக் கூறினார். பனிப்பொழிவு இருக்காது என்பதால் 180 முதல் 200 ரன்கள் எடுத்தால் அது தற்காத்துக் கொள்ளக்கூடிய சவாலான இலக்காக இருக்கும் என அவர் தெரிவித்தார். சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றமாக குர்ஜப்னீத் சிங்கிற்குப் பதிலாக அகீல் உசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், தாங்களும் முதலில் பந்துவீசவே விரும்பியதாகத் தெரிவித்தார். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி, இன்றைய போட்டியில் வென்று தனது பிளே-ஆப் இடத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யத் துடிக்கிறது.
சிஎஸ்கே அணி 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. ரன் ரேட் குறைவாக இருப்பதால், இந்தப் போட்டியில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது சிஎஸ்கே அணிக்கு மிகவும் அவசியமாகும்.
அணிகள் - பிளேயிங் 11
சென்னை சூப்பர் கிங்ஸ்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் படேல், கார்த்திக் சர்மா, டெவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, பிரசாந்த் வீர், அகீல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது
இம்பாக்ட் பட்டியல்: முகேஷ் சௌத்ரி, மேத்யூ ஷார்ட், சர்ஃபராஸ் கான், அமன் கான், குர்ஜப்னீத் சிங்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசன், சலில் அரோரா, ஆர் ஸ்மரன், நிதிஷ் குமார் ரெட்டி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷிவாங் குமார், ஈஷான் மலிங்கா, சாகிப் உசேன், பிரபுல் ஹிங்கே
இம்பாக்ட் பட்டியல்: டிராவிஸ் ஹெட், லியாம் லிவிங்ஸ்டன், அனிகேத் வர்மா, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல்


Click it and Unblock the Notifications
