CSK vs SRH: அவசரப்பட்ட தல.. கடைசி 5 ஓவர்களில் 27 ரன்கள்.. சிஎஸ்கே தோல்விக்கு தோனியே முதல் காரணம்!
சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு, அந்த அணியின் பேட்ஸ்மேன்களே காரணமாக பார்க்கப்படுகிறது. கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே அணி வெறும் 27 ரன்கள் சேர்த்ததே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் ஐதராபாத் அணியின் நீண்ட பேட்டிங் வரிசை அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணி முதல்முறையாக வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இதன் மூலமாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது. சேப்பாக்கம் மண்ணில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக அடையும் 4வது தோல்வி இதுவாகும்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களே காரணமாக அமைந்துள்ளனர்.
ஏனென்றால் சிஎஸ்கே அணி பவர் பிளே ஓவர்களில் மட்டும் 50 ரன்களையும், 7 முதல் 15 ஓவர்கள் வரை 77 ரன்களையும், கடைசி 5 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்த கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தாலே, எளிதாக 175 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் டிவால்ட் பிரெவிஸ் விக்கெட்டை பறிகொடுத்த பின், அடுத்த 2 ஓவர்களிலேயே சிவம் துபே விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே அணியின் ரன் குவிப்புக்க்கு ஸ்பீடு பிரேக்கர் போடப்பட்டது. அங்கிருந்து தோனி 10 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். ஒருவேளை தோனி களத்தில் இருந்திருந்தால், கடைசி நேரத்தில் உனாத்கட் பவுலிங்கில் நன்றாக ரன்களை சேர்த்திருக்க முடியும்.
அதேபோல் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் சிறப்பாக அமைந்த போதும், பவுலிங்கில் அதிகளவிலான ஒய்டு, நோ-பால்களை வீசியதும் பின்னடைவாக அமைந்தது. மொத்தமாக 7 ஒய்டுகள் மற்றும் 2 நோ-பால்களை சிஎஸ்கே அணி வீசி இருக்கிறது. வழக்கமாக சிக்கனமாக வீசும் நூர் அஹ்மத், இந்த போட்டியில் 42 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதற்கு பனிப்பொழிவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications