சாம் கரண் வீசிய 2 ஓவர்கள்.. ஜடேஜா, அன்சுல் கம்போஜ் போராட்டம் வீண்.. ஆட்டம் மாறியதே இங்கதான்!
சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு சாம் கரணின் 2 ஓவர்களே முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. அதுவரை அன்சுல் கம்போஜ் மற்றும் ஜடேஜா இருவரும் சிக்கனமாக ரன்களை விட்டுக் கொடுத்து தடுத்து நிறுத்திய போது, திடீரென சாம் கரண் எளிதாக பவுண்டரிகளையும், சிக்சரையும் அனுமதித்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணி முதல்முறையாக சிஎஸ்கே அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களை சேர்த்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி குறைவான ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தாலும், பவுலிங்கில் அபாரமாக செயல்பட்டது. குறிப்பாக பவர் பிளேவில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இதன்பின் 7வது ஓவரை வீசிய ஜடேஜாவும் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்து சிக்கனமாக பவுலிங் செய்தார். இதனால் நிச்சயமாக அடுத்த ஓவரில் விக்கெட் கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் 8வது ஓவரை வீசிய சாம் கரண் மோசமான பந்துகளை வீசி 2 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார். இதன்பின்னரும் 9வது ஓவரை வீசிய ஜடேஜா கிளாசனின் விக்கெட்டை வீழ்த்தியதோடு, 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து அபாரமாக பவுலிங் செய்தார். அந்த நேரத்தில் உடனடியாக நூர் அஹ்மத் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தோனி மீண்டும் சாம் கரண் கையில் பந்தை கொடுத்தார்.
அந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 14 ரன்களை சாம் கரண் விட்டுக் கொடுக்க, ஐதராபாத் அணி மீதான அழுத்தம் ஒட்டுமொத்தமாக இறங்கியது. இந்த 2 ஓவர்களை சாம் கரண் கொஞ்சம் சிக்கனமாக வீசி இருந்தால் கூட, அந்த நேரத்திலேயே கூடுதலாக 2 விக்கெட்டுகள் கிடைத்திருக்கும். ஆனால் சாம் கரண் எளிதாக ரன்களை விட்டுக் கொடுத்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
பேட்டிங்கிலும் நம்பர் 3ல் களமிறங்கிய சாம் கரண் 10 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் பவுலிங்கில் 2 ஓவர்களை வீசிய சாம் கரண் மொத்தமாக 25 ரன்களை விட்டுக் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் சாம் கரணை கேப்டன் தோனி கொஞ்சம் புரிந்து கொண்டு பவுலிங் செய்ய அழைக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications