சென்னை: சிஎஸ்கே அணியின் ஜடேஜா கொடுத்த அல்வா கேட்சை ஐதராபாத் அணியின் ஹர்சல் படேல் கோட்டைவிட்டார். பந்து உயரப் பறந்த போது உற்சாகத்தில் காவ்யா மாறன் துள்ளிய போது, கடைசி நேரத்தில் தவறியது. இதனால் கோபமடைந்த காவ்யா மாறன், மைதானத்திலேயே கொந்தளித்தார். இந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் ஷேக் ரஷீத் - ஆயுஷ் மாத்ரே கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே ஷேக் ரஷீத் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் சாம் கரண் களம் புகுந்தார். சாம் கரண் நிதானமாக விளையாட, ஆயுஷ் மாத்ரே பவுண்டரிகளிலேயே டீல் செய்தார். ஒவ்வொரு ஓவர்களிலும் பவுண்டரிகள் பறந்த நிலையில், சிஎஸ்கே அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அப்போது ஹர்சல் படேல் பந்தில் சாம் கரண் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஜடேஜா - டிவால்ட் பிரெவிஸ் கூட்டணி களத்தில் இருந்தது. கடந்த போட்டியை போல் அல்லாமல் ஜடேஜா இம்முறை கூடுதல் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.
இதனால் ஜடேஜா விக்கெட்டை வீழ்த்த உடனடியாக ஜீசன் அன்சாரி அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜா லாங் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க, சரியாக ஹர்சல் படேல் அந்த திசையில் ஃபீல்டிங் நின்றிருந்தார். இதனால் ஒட்டுமொத்த சேப்பாக்கம் மைதானமும் நிச்சயம் கேட்சை பிடித்துவிடுவார் நம்பியது. அதேபோல் காவ்யா மாறனும் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்.
ஆனால் ஹர்சல் படேல் அல்வா கேட்சை கோட்டைவிட்டார். அப்போது துள்ளிக் குதித்து கொண்டிருந்த காவ்யா மாறன், உடனடியாக கத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ஐதராபாத் அணியின் உரிமையாளர் மைதானத்திலேயே நேரடியாக கோபத்தில் கத்தியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.