சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் தோனி போட்டிகளில் விளையாடுவது கடினம் தான். அவர் பல போட்டிகளில் விளையாட மாட்டார். அதற்காகத் தான் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை விடாப்பிடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் அணிக்கு வரவழைக்க உள்ளது என ஒரு தகவல் கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆணிவேராகவும், மேட்ச் வின்னராகவும் திகழ்ந்த ரவீந்திர ஜடேஜாவையும், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரணையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கொடுத்துவிட்டு, அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டுவர சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக முயன்று வருகிறது.
மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண வீரர்கள் பரிமாற்றம் போல் தோன்றலாம். ஆனால், இதன் பின்னணியில் இருப்பது, தோனியின் எதிர்காலம் மற்றும் சிஎஸ்கே அணியின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தலைமை குறித்த ஒரு மெகா திட்டம் என்பது கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

2023 இறுதிப் போட்டியின் கடைசி இரண்டு பந்துகளில் சிஎஸ்கே-வுக்கு கோப்பையை வென்று கொடுத்தவர் ஜடேஜா. தோனிக்கு அடுத்தபடியாக அணியின் முகமாகப் பார்க்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒரு வீரரை, சிஎஸ்கே நிர்வாகம் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காது. அப்படியென்றால், சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜாவைத் தியாகம் செய்யுமளவுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு ஒரே பதில், 'தோனியின் அடுத்த கட்டம்' என்பதுதான்.
தோனி 2026 ஐபிஎல் சீசனில் முழுமையாக விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 44 வயதைக் கடந்த அவர், முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், அடுத்த சீசனில் சில முக்கிய முடிவுகளை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2026 ஐபிஎல் சீசனில் இருந்து ஒரு வீரராக அவர் முழுமையாக ஓய்வு பெற வாய்ப்புள்ளது.
தோனியை வைத்து தான் சிஎஸ்கே அணியின் வியாபார ஒப்பந்தங்கள் இருப்பதால் தோனி அணியின் ஆலோசகராக (Mentor) இருந்துகொண்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் மட்டும் விளையாடலாம். அல்லது போட்டியின் கடைசி இரண்டு அல்லது மூன்று ஓவர்களில் மட்டும் பேட்டிங் செய்ய வரும் 'இம்பாக்ட்' வீரராகக் களமிறங்கலாம்.
தோனி இது போன்ற ஒரு முடிவை எடுத்தால், சிஎஸ்கே அணிக்கு ஒரு முழு நேர விக்கெட் கீப்பர் தேவைப்படுகிறார். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே வீரராக சஞ்சு சாம்சனை சிஎஸ்கே நிர்வாகம் பார்க்கிறது.
தோனியின் இடத்திற்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனைத் தாண்டி, ஒரு கேப்டன் மெட்டீரியலை சிஎஸ்கே தேடி வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தாலும், அவருக்கு மேலும் அனுபவம் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில், சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வின் பல தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்.
தோனியின் விக்கெட் கீப்பிங் இடத்தை நிரப்புவதோடு, அணியின் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடி ரன் குவிக்கக் கூடியவர். பல ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய அனுபவம் அவருக்கு உண்டு. சஞ்சு சாம்சனுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. தோனி இல்லாத பட்சத்தில் சிஎஸ்கே-வுக்கு இதுபோன்ற ரசிகர் பட்டாளம் உடைய ஒருவர் நிச்சயம் தேவை. இந்தக் காரணங்களால்தான், ஜடேஜா போன்ற ஒரு அனுபவமிக்க வீரரை இழந்து, அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த மெகா பரிமாற்றத்திற்கு சிஎஸ்கே முன்வந்துள்ளது.