சிஎஸ்கே பயிற்சியாளராக ராகுல் டிராவிட் என பரவும் தகவல்.. காசி விஸ்வநாதன் அதிரடி விளக்கம்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மாற்றப்படுவார் என்றும், அவருக்குப் பதிலாக ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்றும் பரவி வரும் செய்திகளுக்கு சிஎஸ்கே நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தலைமை பயிற்சியாளர் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், ராகுல் டிராவிட்டிடம் இது தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் ஒரு அங்கமாக இருந்து வரும் ஸ்டீபன் பிளமிங், தோனியுடன் இணைந்து 5 முறை கோப்பைகளை வென்று தந்துள்ளார். இருப்பினும், கடந்த 3 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் செயல்பாடு ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. கடந்த 3 சீசன்களில் அந்த அணி முறையே 5, 10 மற்றும் 8-வது இடங்களையே பிடித்துள்ளது.

இந்த 3 ஆண்டுகளில் விளையாடிய மொத்தம் 42 போட்டிகளில் 17-ல் மட்டுமே வெற்றி பெற்று, 25 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. நவீன டி20 ஆட்டமுறைக்கு ஏற்ப அணியை வழிநடத்த பிளமிங் தவறிவிட்டதாகக் கூறி, அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில், "கிரிக்கெட் தொடர்பான எந்த விவகாரத்திலும் நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. சீசன் முடிந்த பிறகு வழக்கமாக மேற்கொள்ளும் ஆய்வுக்குப் பின்பே அடுத்தகட்ட திட்டமிடல் தொடங்கும்." எனத் தெளிவுபடுத்தினார். பிளமிங் தற்போது அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் மற்றும் தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 தொடர்களிலும் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்குப் பயிற்சியாளராக இருப்பதால், அவரை மாற்றும் முடிவு இப்போதைக்கு எடுக்கப்படாது எனத் தெரிகிறது.
அதே சமயம், சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்துப் பேசும்போது தோனியின் முடிவே இறுதியானது என நிர்வாகம் கருதுகிறது. தோனி அடுத்த ஆண்டு வீரராகக் களம் இறங்குவாரா அல்லது பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பொறுப்பை ஏற்பாரா என்பதை அவரே முடிவு செய்வார் என காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். 2027-ம் ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாக பயிற்சியாளர் மாற்றம் மற்றும் அணியின் கட்டமைப்பு குறித்து சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு பிளமிங் நீக்கம் குறித்த செய்திகள் வெறும் வதந்தியாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
