Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: 15 ஆண்டுகளில் இல்லாத பெருத்த அவமானம்.. ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை பதிவு செய்த சிஎஸ்கே

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் 200 ரன்கள் என்பது மிகச் சாதாரணமான ஒரு விஷயமாக மாறிவிட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 50 ரன்களை எடுக்க 12 ஓவர்களை எடுத்துக்கொண்டு அவமானத்தை சந்தித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியதால், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு மோசமான சாதனையை அந்த அணி பதிவு செய்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே படுமோசமாக அமைந்தது. முதல் ஓவரிலேயே பவுண்டரிகள் இன்றி தவித்த அந்த அணி, பவர்பிளேயில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. சஞ்சு சாம்சன் 11 ரன்களிலும், உர்வில் பட்டேல் சொற்ப ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். சர்ஃபராஸ் கான் கோல்டன் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். டெவால்ட் ப்ரீவிஸ் 9வது ஓவரில் நடையை கட்டினார். இதனால் சிஎஸ்கே அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. சிவம் துபே 12வது ஓவரில் அடித்த ஒரு பவுண்டரியின் மூலம் தான் சிஎஸ்கே அணி 50 ரன்களை தொட்டது.

CSK Worst Batting Record in 15 Years Slowest Fifty of IPL 2026 Season Against Gujarat Titans

இது ஐபிஎல் 2026 தொடரில் ஒரு அணி 50 ரன்களை எட்ட எடுத்துக்கொண்ட அதிகபட்ச ஓவர்களுக்கான மோசமான சாதனையாகும். இதற்கு முன்பு 2011ல் பெங்களூரு அணிக்கு எதிராக 12.1 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்ததே சிஎஸ்கே அணியின் மிக மெதுவான ஸ்கோராக இருந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி மீண்டும் அத்தகைய ஒரு மோசமான நிலையை எட்டியுள்ளது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பொறுமையுடன் போராடினார். அவரும் தான் சந்தித்த முதல் 35 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் தவித்தார். இதுவும் நடப்பு சீசனின் மிக நீண்ட பவுண்டரி வறட்சியாக அமைந்தது. இருப்பினும் இறுதிவரை களத்தில் நின்ற அவர் 60 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய ஜேமி ஓவர்டன் 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசியதால் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை மிகச் சரியாக பயன்படுத்தி சிஎஸ்கே அணியை முடக்கினர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சற்று சாதகமாக இருந்த போதிலும், சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அதனை கணிக்கத் தவறி பொறுப்பற்ற முறையில் ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ககிசோ ரபாடா மிகச் சிறப்பாக பந்துவீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷத் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்ஸ்மேன்களின் இந்த மோசமான தொடக்கமே சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 158 ரன்களில் சுருள முக்கிய காரணமாக அமைந்தது.

Story first published: Sunday, April 26, 2026, 21:21 [IST]
Other articles published on Apr 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+