சிஎஸ்கே இளம் வீரர் ஆயுஷ் மத்ரே மரண அடி.. டெஸ்ட் போட்டியில் டி20 வேக செஞ்சுரி.. உலக சாதனை!
லண்டன்: இங்கிலாந்து மண்ணில் இந்திய சீனியர் அணி டெஸ்ட் போட்டியில் போராடி வரும் நிலையில், மறுபுறம் இளம் இந்திய அணி கிரிக்கெட் உலகில் ஒரு புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இந்திய U-19 அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் இளம் வீரருமான ஆயுஷ் மத்ரே, இளைஞர் டெஸ்ட் (Youth Test) கிரிக்கெட்டில் யாரும் செய்யாத ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் டி20 அதிரடி
இங்கிலாந்து U-19 அணிக்கு எதிரான இரண்டாவது இளைஞர் டெஸ்ட் போட்டி செல்ம்ஸ்ஃபோர்டில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் கடைசி நாளில், 355 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய மற்றொரு இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி, முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால், அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் ஆயுஷ் மத்ரே, டெஸ்ட் போட்டி என்பதை மறந்து டி20 போட்டியைப் போல அதிரடியில் ஈடுபட்டார். இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 64 பந்துகளில் சதத்தை எட்டி வரலாற்று சாதனை படைத்தார். இதன் மூலம், இளைஞர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இதுவாகும்.
இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஜார்ஜ் பெல், இலங்கைக்கு எதிராக 88 பந்துகளில் அடித்த சதமே சாதனையாக இருந்தது. ஆயுஷ் மத்ரே தனது ஆட்டத்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். இறுதியில் அவர் 80 பந்துகளில் 126 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
டிராவில் முடிந்த போட்டி
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 309 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விஹான் மல்ஹோத்ராவின் சதத்தின் (120) உதவியுடன் 279 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆயுஷ் மத்ரேயின் வரலாற்று சிறப்புமிக்க ஆட்டம் மற்றும் அபிக்யான் குண்டுவின் அதிரடியான 46 பந்துகளில் 65 ரன்கள் ஆகியவற்றால் இந்திய அணி வெற்றி பெறும் சூழல் உருவானது. இருப்பினும், மத்ரே ஆட்டமிழந்த பிறகு விக்கெட்டுகள் சரிய, ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், இப்போட்டி டிராவில் முடிவடைந்தது.
ஆயுஷ் மத்ரேயின் இந்த சாதனை மூலம், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை இளம் வீரர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆயுஷ் மத்ரே, தனது திறமையை சர்வதேச அளவில் வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications