மும்பை : 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்த தொடரை ஐசிசி - பிசிசிஐ இணைந்து நடத்துகின்றன. ஒவ்வொரு கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு முன்பாகவும் அந்த தொடரில் பங்குபெறும் நாடுகள் குறித்த காட்சிகளுடன் கூடிய ஒரு பாடலை வெளியிடுவார்கள்.
அந்த பாடல் மற்றும் அந்த காட்சிகள் உலகக்கோப்பையில் பங்கு பெறும் நாடுகள் மற்றும் அவர்களின் முக்கிய வீரர்கள் அல்லது கிரிக்கெட்டுக்காக வீரர்களின் உழைப்பு என ஏதோ ஒரு முக்கியமான, மனதை தொடும் விஷயத்தை மையக் கருத்தாக வைத்து வெளியிடுவார்கள்.

அந்த வகையில் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை ஆந்தம் ஒன்றை "ஒன் டே எஸ்க்பிரஸ்" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது ஐசிசி. பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி உள்ள இந்த ஆந்தம் வெளியான சில வினாடிகளில் இருந்தே நன்றாக இல்லை என்ற விமர்சனத்தை பெறத் துவங்கி உள்ளது. இது சுத்த கிரிஞ்ச் என மொத்தமாக முத்திரை குத்தப்பட்டுவிட்டது.
அந்த பாடல் முழுவதும் இந்தியில் உள்ளது. பாடல் வரிகள் இந்தியா (அதிலும் வட இந்தியா) மற்றும் பாகிஸ்தான் நாட்டினருக்கு மட்டுமே புரியும். சரி, பாட்டு தான் புரியவில்லை. இசையாவது நம் மனதை வசீகரிக்கிறதா அல்லது நம்மை துள்ள வைத்து, ஆட்டம் போட வைக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
சரி, இசை, பாடல் வரிகளை விட்டுவிடலாம். காட்சிகளாவது கிரிக்கெட்டை பறைசாற்றும் வகையில், கிரிக்கெட் ஆடும் அனைத்து நாடுகளை பறைசாற்றும் வகையில் இருக்கிறதா என பார்த்தால் அதுவும் இல்லை. மொத்த பாடலும் வெறும் நடனம் மட்டுமே இடம் பெற்று உள்ளது. வேறு எந்த காட்சிகளும் அதில் இல்லை.
மேலும், மொத்த நடனமும் மெட்ரோ ரயிலையும் விட நவீனமான ரயில் செட் போட்டு அதில் எடுத்து இருக்கிறார்கள். அது ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகனை ஈர்க்கும் வகையில் இல்லை. அந்த செட்டுக்குள் மொத்த நடன காட்சிகளும் இடம் பெறுகின்றன். ரன்வீர் சிங்குடன் பல நடன கலைஞர்கள் ஆடுகிறார்கள்.
இடையே ஒவ்வொரு அணியின் ரசிகர்கள் போல சிலர் அந்தந்த அணிகளின் ஜெர்சிக்களை அணிந்து கொண்டு ஒவ்வொரு அணிக்கும் இரண்டு பேராக ஆடுகிறார்கள். அது எதுவும் நம் மனதில் பதியவும் இல்லை. அவை அந்த அணிகளை நமக்கு நினைவுபடுத்தும் வகையிலும் இல்லை.
கிரிக்கெட் என்றாலே ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களை எங்காவது காட்டினால் தான் அது ரசிகர்களை ஈர்க்கும். குறைந்தபட்சம் ஒவ்வொரு அணிகளின் கேப்டன்களையாவது காட்டி இருக்கலாம். எதுவும் இல்லாமல் ரன்வீர் சிங் குதித்து குதித்து ஆடுவது மட்டுமே வருகிறது. இடையே ஒரு ரசிகர் பேட்டிங் செய்வது போலவும், அம்பயர் ரயிலின் அபாயச் சங்கிலியை இழுப்பது போல ஒரு காட்சி வருகிறது. அதையெல்லாம் பார்த்தால் நமக்கு உச்சகட்ட கடுப்பாக இருக்கிறது.
பல ரசிகர்கள் 2011இல் மிக எளிமையாக வெளியிடப்பட்ட ஒருநாள் உலகக்கோப்பை பாடல் இன்று வரை மிக சிறப்பாக இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர். ஆக, மொத்தத்தில் கிரிஞ்ச் உலகக்கோப்பை தொடராக 2023 உலகக்கோப்பை தொடங்குகிறது.