இங்கிலாந்து சோலி முடிஞ்ச்.. 36.2 ஓவர்களில் முடிந்த ஆட்டம் .. ருத்ரதாண்டவம் ஆடிய கான்வே, ரச்சின்!
அகமதாபாத்: நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
13வது உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஃபிட்னஸ் பிரச்சனை காரணமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஜோ ரூட் 77 ரன்களும், கேப்டன் பட்லர் 42 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - யங் கூட்டணி களமிறங்கியது. இதில் 2வது ஓவரிலேயே யங் டக் அவுட்டாகி வெளியேற, கான்வே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி இணைந்தது.
5வது ஓவருக்கு பின் தொடங்கிய அதிரடி கடைசி வரை எங்குமே நிற்கவில்லை. ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்சர் என்று இருவரும் வெளுத்து கட்டினர். குறிப்பாக ரச்சின் ரவீந்திரா களமிறங்கி அடுத்த சில ஓவர்களில் ஆடிய அதிரடி ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்தது. சிறப்பாக ஆடிய இருவருமே 36 பந்துகளில் அரைசதம் கடக்க, இங்கிலாந்து கேப்டன் பட்லர் என்ன செய்வதென தெரியாமல் முழித்தினார். அவரும் அடில் ரஷீத், மொயின் அலி என்று அட்டாக்கை மாற்றி கொண்டு வர, இங்கிலாந்து அணிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் கான்வே - ரச்சின் கூட்டணி எடுத்து கொண்டது. சிறப்பாக ஆடிய கான்வே 83 பந்துகளில் சதம் அடித்து அசத்த, இன்னொரு பக்கம் ரச்சின் 82 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். இதன்பின் இங்கிலாந்து வீரர்களே தோல்வியை ஒப்புக் கொண்டது போல் கடமைக்கு விளையாடினார்கள். இறுதியாக 36.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 283 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
கடைசி வரை களத்தில் இருந்த கான்வே 121 பந்துகளில் 3 சிக்சர், 19 பவுண்டரி உட்பட 152 ரன்களும், ரச்சின் 96 பந்துகளில் 5 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 123 ரன்களும் விளாசினார். 2வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 273 ரன்கள் பாடர்ட்னர்ஷிப் அமைத்தனர். கடந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியிடம் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் கோப்பையை பறிகொடுத்த நியூசிலாந்து அணி, தரமான பதிலடியை கொடுத்து அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications