CWC 2023: எல்லாமே பணம் தான் போல.. முதல் போட்டியில் இந்தியா விளையாடாதது ஏன்? வரலாற்றை மாற்றிய பிசிசிஐ
அகமதாபாத்: சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை விளையாட வைக்காமல் பிசிசிஐ வரலாற்றை மாற்றியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. 45 நாட்கள், 48 போட்டிகள், 10 மைதானங்கள், 10 அணிகள், 150 வீரர்கள் என்று உலகக்கோப்பை திருவிழா கொண்டாட்டமாக தொடங்கவுள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடுகிறது. இந்த இரு அணிகளும் கடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மோதின. இதன் காரணமாக இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே இரு அணிகள் விளையாடவுள்ளன.

ஆனால் இதற்கு முன்பாக நடைபெற்ற உலகக்கோப்பையில் தொடரை நடத்தும் அணி தான் முதல் போட்டியில் விளையாடும். அந்த வகையில் 2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளே முதல் போட்டியில் மோதின. அதேபோல் 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளே முதல் போட்டியில் மோதின.
அதேபோல் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் தொடரை நடத்திய இந்தியா - வங்கதேசம் அணிகளே முதல் போட்டியில் விளையாடின. அதுமட்டுமல்லாமல் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தியது. இதனால் முதல் நாளில் நியூசிலாந்து - இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து என்று இரு போட்டிகள் நடத்தப்பட்டது. அவ்வளவு ஏன், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தொடரை நடத்திய இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடியது.
இதுவரை உலகக்கோப்பை வரலாற்றில் முதல் நாள் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அணியே விளையாடி வந்துள்ளது. ஆனால் இம்முறை முதல் போட்டியில் ஐபிஎல் தொடரை போல் கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடிய இரு அணிகள் விளையாடுகின்றன. இதற்கு பிசிசிஐ-யின் பணம் மீதான ஆசையே காரணமாக அமைந்துள்ளது. வார இறுதியில் இந்திய அணி விளையாடினாலே அதிக வருவாய் கிடைக்கும் என்பதால், இந்தியா நடத்தும் உலகக்கோப்பை முதல் போட்டியில் இந்திய அணி விளையாடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications