இவர் ரொம்ப சேட்டைக்காரர் சார்... டெல்லி போட்டிக்கு முன் கெயிலின் அசத்தல் டான்ஸ் !
Recommended Video

டெல்லி: டி-20 கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்டான பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் மைதானத்தில் இறங்கினாலே, எதிரணிகளுக்கு கிலி ஏற்படும். மைதானத்தில் எவ்வளவு ஜாலியாக விளையாடுவாரோ அந்த அளவுக்கு மைதானத்துக்கு வெளியேயும் தீராத விளையாட்டுப் பிள்ளை கிறிஸ் கெயில். டெல்லியில் நடக்கும் டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன் அவர், டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர், 38 வயதாகும் கிறிஸ் கெயில். டி-20 கிரிக்கெட்டில் உலகெங்கும் நடக்கும் தொடர்களில், கண்டிப்பாக கிறிஸ் கெயில் இருப்பார். தற்போது நடந்து வரும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில், பஞ்சாப் அணிக்காக அவர் விளையாடுகிறார்.

இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தின்போது, அவரை எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை. கடைசியில் பஞ்சாப் அணி அவரை ஏலம் எடுத்தது. இதுவரை தான் விளையாடிய மூன்று ஆட்டங்களில் ஒரு சதம், இரண்டு அரை சதம் என, 229 ரன்கள் குவித்துள்ளார்.
டெல்லிக்கு எதிராக, டெல்லியில் இன்று நடக்கும் போட்டியில் பஞ்சாப் களமிறங்குகிறது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் கெயில் டான்ஸ் ஆடும் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஹிந்தியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, ஹரியானா, ராஜஸ்தானில் பிரபலமான நாட்டுப்புற இசையான ஹரியான்வி இசைக் கலைஞர் சப்னா சவுத்ரியின் பாடலுக்கு கிறிஸ் கெயில் சூப்பர் டான்ஸ் ஆடுகிறார்.
வெள்ளை கோர்ட் போட்டுக் கொண்டு, அனாயசமாக அவர் ஆடும் நடனம், மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மைதானத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்துடன், ஜாலியான நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களை ஈர்ப்பார்கள். அதில், கெயிலின் குறும்புத்தனமான நடவடிக்கைகள் மிகவும் பிரபலம். கிரிக்கெட்டில் அதிரடியுடன், தற்போது அதிரடி நடனமும் ஆடி அசத்தியுள்ளார் கெயில்.


Click it and Unblock the Notifications