
பயிற்சியாளர்
சிறந்த சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்த டேனியல் வெட்டோரி நியூசிலாந்து அணியின் கேப்டனாகவும் இருந்தவர். ஓய்வுக்கு பின் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.

2020 டி20 உலகக்கோப்பை
2020 டி20 உலகக்கோப்பைக்காக அவரை 100 நாட்களுக்கு மட்டும் சிறப்பு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. டி20 உலகக்கோப்பை தொடரும் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சம்பளம் அதிகம்
வங்கதேச பயிற்சியாளர்களில் அவருக்கு தான் சம்பளம் அதிகம். அவரது சம்பளம் இந்திய மதிப்பில் 1.88 கோடி ஆகும். கொரோனா வைரஸ் காரணமாக எந்த கிரிக்கெட் போட்டியும் நடைபெறாத நிலையில், அவரும் வங்கதேச அணிக்கு பெரிய அளவில் பயிற்சி அளிக்கவில்லை.

உதவி
இந்த நிலையில் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை, வங்கதேச கிரிக்கெட் அமைப்பில் பணிபுரியும் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வழங்கி விடுமாறு அவர் கூறி உள்ளதாக வங்கதேச கிரிக்கெட் போர்டின் தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி தெரிவித்தார்.

பாராட்டுக்கள்
டேனியல் வெட்டோரி எவ்வளவு தொகையை அளிக்குமாறு கூறினார் என்பது தெரியவில்லை. எனினும், அவரது உதவி பாராட்டுக்களை பெற்றுள்ளது. வங்கதேச கிரிக்கெட் போர்டு கடும் நிதிச் சிக்கலில் இருக்கும் நிலையில் அவர் செய்த உதவியால் பல ஊழியர்கள் பயன் அடைவார்கள்.

இந்திய வீரர்கள் உதவ வேண்டும்
நியூசிலாந்து வீரரான டேனியல் வெட்டோரி, வங்கதேசத்திற்கு உதவி செய்த நிலையில், கோடிகளில் கொழிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பெரிய அளவில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











