ராவல்பிண்டி: பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராவல்பிண்டி அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், உஸ்மான் தாரிக் பந்துவீசும் போது தனது ஓட்டத்தில் திடீரென ஒரு விநாடி நின்று பின்னர் பந்தை வீசினார்.
இது பேட்டர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் அமைந்தது. இதனால் அதிருப்தியடைந்த மிட்செல், தான் பேட்டிங் செய்யத் தயாராக இல்லை எனக் கூறி ஸ்டம்பை விட்டு விலகிச் சென்றார். ஒரு ஓவரில் 2 முறைக்கும் மேலாக அவர் இவ்வாறு செய்ததால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து சமூக வலைதளத்தில் விவாதித்திருந்தார். பந்துவீச்சாளரின் ஓட்டம் பேட்டர்களின் பார்வையை மறைக்கும் வகையில் இருந்தால், விதிகளைப் பயன்படுத்தி பேட்டர்கள் விளையாட மறுக்கலாம் என அஸ்வின் குறிப்பிட்டிருந்தார்.
அஸ்வினின் அந்த ஆலோசனையைத் தான் தற்போது அவருடன் சிஎஸ்கே அணியின் ஒன்றாக விளையாடிய டேரில் மிட்செல் களத்தில் செயல்படுத்தியுள்ளார். அதே சமயம், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை சட்டப்பூர்வமானது என ஐசிசி ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய குவெட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரிலே ரூசோ 53 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய ராவல்பிண்டிஸ் அணி, குவெட்டா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ராவல்பிண்டிஸ் தரப்பில் சாத் மசூத் மட்டும் 31 ரன்கள் எடுத்தார்.

சர்ச்சைக்குக் காரணமான உஸ்மான் தாரிக், மிகச் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் தன்னிடம் மோதிய மிட்செல் விக்கெட்டையும் அவர் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். தற்போது ராவல்பிண்டி அணி விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. குவெட்டா அணி 5 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5வது இடத்தில் நீடிக்கிறது. முகம்மது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.