கடைசி நொடியில் ட்விஸ்ட்.. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த நியூஸி,. அதிர்ந்த மைதானம்!
அமீரகம்: இங்கிலாந்து அணியை வெளுத்து வாங்கி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் லீக் போட்டிகள் முடிந்து தற்போது அரையிறுதி சுற்றை எட்டியுள்ளது.
இதில் முதல் அரையிறுதிப்போட்டியாக இன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெற்றன.

அதிர்ச்சி தொடக்கம்
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அமீரக களத்தில் முதலில் பவுலிங் செய்வது சாதகமாக இருக்கும். அதன்படியே இன்றும் இங்கிலாந்து அணியால் தொடக்க ஓவர்களில் ரன்களை அடிக்க முடியவில்லை. தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் டேவிட் மாலன் 42 ரன்களுக்கும், பட்லர் 29 ரன்களுக்கும் வெளியேறினார்.

கடின இலக்கு
எனினும் நியூசிலாந்து பவுலர்களை எதிர்த்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முடியவில்லை. 15 ஓவர்களில் 116 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் கடைசி 4 ஓவர்களில் ஸ்கோரை மாற்றி அமைத்தார் மொயீன் அலி. 37 பந்துகளை சந்தித்த அவர், 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த லியாம் லிவிங்ஸ்டன் 10 பந்துகளில் 17 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 47 ரன்களை சேர்த்தது.

தடுமாறிய நியூசிலாந்து
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே சரிவாக இருந்தது. அந்த அணியின் ஓப்பனிங் வீரர் கப்தில் 4 ரன்களுக்கும், கேப்டன் வில்லியம்சன் 5 ரன்களுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே மற்றும் டேர்லே மிட்செல் ஜோடி நிதானமாக ஸ்கோரை உயர்த்தி வந்தனர். ஒருகட்டத்தில் கான்வே 46 ரன்களுக்கு அவுட்டாக, அதன்பின் வந்த வீரர்களும் விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் 16 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 57 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி நேர ட்விஸ்ட்
நியூசிலாந்து அணி தோற்றுவிடும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அதனை மாற்றி எழுதினார் டேர்லே மிட்செல், ஒரு புறம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுணையில் ஒற்றையாளாக சிக்ஸர் மழை பொழிந்தார். 47 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் விளாசினார். இதனால் 19 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.


Click it and Unblock the Notifications