”அடங்காதவன் டா நான்” புஷ்பா ஸ்டைலில் சொன்ன ஆஸ்திரேலிய வீரர்.. இவர யாராச்சும் கட்டுப்படுத்துங்க!
ஐதராபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் புஷ்பா ஸ்டைல் செய்து கொண்டாடிய வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி 2016ஆம் ஆண்டு கோப்பையை வென்றதற்கு முக்கியமான காரணம் டேவிட் வார்னர். ஒரு கேப்டனாக முன்நின்று அணியை வழிநடத்தியதோடு, ஒரு பேட்ஸ்மேனாக அணியை தனியாளாக காத்து நின்றார் என்றே சொல்லலாம். இவரது தலைமையில் ஐதராபாத் அணி 2016ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதற்கிடையே ஓராண்டு தடையால் 2017ஆம் ஆண்டு மட்டும் வார்னரால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை.

2021ஆம் ஆண்டு வரை ஐதராபாத் அணிக்காக மொத்த உழைப்பையும் கொட்டிய டேவிட் வார்னரை, ஒரேயொரு சீசனில் மோசமான விளையாடியதற்காக அணியில் இருக்கும் போதே ரசிகர்களுடன் அமர வைத்து சோதித்து பார்த்தது ஐதராபாத் அணி நிர்வாகம். அதன்பின்னர் ஐதராபாத் அணியில் இருந்து வெளியேறிய டேவிட் வார்னர், பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகிறார். என்ன தான் அணி மாறினாலும், ஐதராபாத் மீதான பாசத்தை டேவிட் வார்னர் வெளிப்படுத்த தவறியதே இல்லை.
அந்த வகையில் நேற்று ஐதராபாத் மைதானத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை பயிற்சி போட்டி நடைபெற்றது. இதனை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமானோர் கூடினர். இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 77 ரன்களும், கிரீன் 50 ரன்களும், வார்னர் 48 ரன்களும் விளாசினர். இதன்பின்னர் இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
அப்போது பாகிஸ்தான் அணி 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி கொண்டிருந்தது. திடீரென மைதானத்தில் புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடல் ஸ்பீக்கரில் ஒலிக்கப்பட, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ரசிகர்களை பார்த்து "அடங்காதவன்டா" என்று நாடியை தடவி அல்லு அர்ஜூன் ஸ்டைலை செய்து காட்டினார். இதனால் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் கூடுதல் உற்சாகமடைந்தனர். அதேபோல் ஐதராபாத்தில் தரையிறங்கிய பின், ஐதராபாத் பிரியாணியை நீண்ட இடைவெளிக்கு பின் சாப்பிடுவதாக புகைப்படம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications