அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள குஜராத் அணியும், கடைசி இடம் பிடித்துள்ள டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்தியுள்ளது. விளையாடியுள்ள 8 போட்டியில் டெல்லி அணி 6 தோல்வியும், 2 வெற்றியும் பெற்றுள்ளது.
குஜராத் அணி எப்போதுமே வெற்றிக்கரமாக சேஸிங் செய்வதில் வல்லவர்கள். விளையாடிய 13 போட்டிகளில் குஜராத் அணி 12 முறை சேஸிங் செய்து வென்று இருக்கிறார்கள். இப்படி இருக்க, டாஸ் வென்ற டேவிட் வார்னர், குஜராத்துக்கு சாதகமாக இருப்பது போல், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இது குறித்து பேசிய வார்னர், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். முதலில் விளையாடி பெரிய ஸ்கோர் அடித்துவிட்டு, பிறகு குஜராத் அணிக்கு நெருக்கடி அளிக்க முடியும் என நினைக்கிறேன். இன்றைய ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் உடல் நலம் குன்றியதால் விளையாடவில்லை.
இன்னும் 6 போட்டிகள் இருக்கிறது. இதனால் எங்களுக்கு இன்னும் பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து போராடி விளையாடுங்கள் என்று தான் என் அணி வீரர்களுக்கு நான் சொல்கிறேன் என வார்னர் கூறினார். தென்னாப்பிரிக்க வீரர் ரூசோவ் அணிக்கு திரும்பியதால், பேட்டிங் வரிசை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் அணியை பொறுத்தவரை, தாங்கள் முதலில் பந்துவீசுவதாக இருந்தோம் என ஹர்திக் பாண்டியா கூறினார். இதே போன்று குஜராத் அணியிலும் எந்த மாற்றமும் இல்லை. இன்றைய ஆட்டத்தில் வென்றால் குஜராத் அணி 14 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை அதிகரிக்கும்.