ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் மூலம் பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது இரண்டாம் வீடாக இந்தியாவை மாற்றிக் கொண்டார்கள். அந்த அளவிற்கு ஐபிஎல் அணிகளில் விளையாடுவதன் மூலம் இந்திய ரசிகர்களின் அன்பால் பல வீரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடுகிறார்கள்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தனது உடல் பொருள் ஆவியை கொடுத்து சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்திருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு சென்றாலும் ஹைதராபாத்தில் என்ன நடக்கிறது என்பதை சுற்றியே டேவிட் வார்னரின் உள்ளம் இருக்கும். அந்த வகையில் தெலுங்கில் ஏதேனும் ஒரு திரைப்படம் வந்தாலே உடனே அதனை டிக் டாக்கில் போட்டு வார்னர் பிரபலமாக்கி விடுவார். அந்த வகையில் ஹைதராபாத்தின் தத்துப் பிள்ளையாகவே டேவிட் வார்னர் இருந்து வந்தார்.
ஆனால் டேவிட் வார்னருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டிங் பார்ம் பாதிக்கப்பட்டது. இதனால் ஹைதராபாத் அணியால் டேவிட் வார்னர் அவமானப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக வார்னர் இருக்கும் போதே அணியில் வேறு ஒருவரை கேப்டனாக மாற்றி விட்டு அவரை பெஞ்சில் அணி நிர்வாகம் அமர்த்தியது.
மேலும் டேவிட் வார்னரை அணியை விட்டு அவராகவே செல்ல என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை அனைத்தையும் ஹைதராபாத் அணி நிர்வாகம் செய்தது. இதனால் டேவிட் வார்னர் ஹைதராபாத்தில் இருந்து விலகி டெல்லி அணிக்கு சென்று விட்டார். இந்த நிலையில் டேவிட் வார்னர் பழசை மறக்காமல் ஹைதராபாத்தில் வந்து இறங்கியவுடன் அவர் செய்த காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தில் டேவிட் வார்னர் இருந்தபோது அங்கு இருந்த மைதான ஊழியர்களுடன் பாசமாக பழகி இருக்கிறார். தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர் மைதான ஊழியர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஊழியர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். வார்னர் எங்கு போனாலும் ஐதராபாத் மண்ணை மறக்காமல் இருக்கிறார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்தது.