மெல்போர்ன்: ஐபிஎல் மெகா ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னரை டெல்லி அணி தேர்வு செய்தது.
இந்த நிலையில், வார்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.
இதனால் வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் , ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்.

இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி, தங்களது அணி வீரர்களின் புகைப்படத்தை வெளியிட்டது. இதில் வார்னரின் புகைப்படம் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. வார்னரின் தலைக்கும் , உடலுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. இதனை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள் என எதிர்பார்த்தால் வார்னரே கிண்டல் செய்துள்ளார்.
டெல்லி அணியை டேக் செய்துள்ள வார்னர், இது யார் உடம்பு, மார்கஸ் ஸ்டோனிஸ் உடலோடு என் தலையை ஒட்டி வைத்துவிட்டீர்களா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த டெல்லி அணி, இது ஸ்டோனிஸ் உடல் இல்லை. இந்த வீரர் டெல்லி அணியில் தான் இருக்கிறார் என்று பதில் அளித்தது.

தனது புகைப்படத்தை பார்த்து வார்னர் அடித்துள்ள இந்த கிண்டல், தற்போது டிரெண்டாகி வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்துள்ள வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்துள்ளார். ஐதராபாத் அணியில் இருந்த வார்னர், டாம் மூடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த அணியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.