பாக்கெட்டுல என்னப்பா வச்சிருக்கே.. சோடா மூடியா..? ஒண்ணுமில்லப்பா.. கைய விட்டு காட்டும் அவர்..!
லண்டன்: பாக்கெட்டில் ஒன்றும் இல்லையப்பா என்று சொல்லாமல் சொல்லும் டேவிட் வார்னரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 284 ரன்களும் இங்கிலாந்து அணி 374 ரன்களும் குவித்தன.
இதையடுத்து, 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை 3வது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியா தொடங்கியது. வார்னர், பான்கிராப்ட் இருவரையும் முதல் 10 ஓவர்களுக்குள் இழந்தது. வார்னர் 8 ரன்களிலும் பான் கிராப்ட் 7 ரன்களிலும் வெளியேறினர். அதனால், அந்த அணி 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

நிதான ஆட்டம்
தொடர்ந்து 3வது விக்கெட்டுக்கு கைகோத்த கவாஜா - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடியது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது. கவாஜா 40 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹெட், ஸ்மித்துடன் சேர்ந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

முன்னிலை பெற்றது
3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஸ்மித் 46 ரன்களுடனும் ஹெட் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 34 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. முதல் இன்னிங்சில் 144 ரன்கள் குவித்து அசத்திய ஸ்மித், 2வது இன்னிங்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ரசிகர்கள் முழக்கம்
இதனிடையே 3ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பேட் செய்தபோது, ஆஸ்திரேலிய வீரர் வார்னர் எல்லைக்கோடு அருகே பீல்டிங் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது, இங்கிலாந்து ரசிகர்கள் வார்னர் பந்தை சேதப் படுத்திய விவகாரத்தை நினைவுபடுத்தி முழக்கமிட்டனர்.
பாக்கெட்டில் எதுவும் இல்லை
இந்நிலையில், வார்னரை சீண்டும் வகையில் அவர்கள் கோஷமெழுப்பவே, தனது 2 பாக்கெட்டுகளையும் காட்டி அதில் ஒன்றும் இல்லை என்பது போல வார்னர் செய்துகாட்டினார். சிரித்து கொண்டே வார்னர் தனது பாக்கெட்டுகளில் ஒன்றும் இல்லை என்று காட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications