IPL 2026: கண்ணீர் விட்ட டேவிட் மில்லர்.. அருகே வந்து அக்சர் செய்த செயல்.. நெகிழ்ந்த ரசிகர்கள்
டெல்லி: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்தது. ஆட்டத்தின் முடிவில் தனது தவறால் அணி தோற்றுவிட்டதே என மனமுடைந்த டேவிட் மில்லருக்கு, கேப்டன் அக்சர் படேல் ஆறுதல் கூறிய சம்பவம் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.
டெல்லியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 70, வாஷிங்டன் சுந்தர் 55, ஜோஸ் பட்லர் 52 ரன்கள் எடுத்தனர். கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு கே.எல் ராகுல் 92 மற்றும் பதும் நிசங்கா 41 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். ஆனால் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார்.

விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய மில்லர், மீண்டும் களமிறங்கி அதிரடி காட்டினார். கடைசி 2 ஓவரில் டெல்லி வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. முகமது சிராஜ் வீசிய 19வது ஓவரில் மில்லர் 2 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 23 ரன்கள் விளாசி ஆட்டத்தை மீண்டும் டெல்லி பக்கம் கொண்டு வந்தார்.
பிரசித் கிருஷ்ணா வீசிய பரபரப்பான கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 5வது பந்தில் சிங்கிள் ஓட மில்லர் மறுத்துவிட்டார். இதுவே ஆட்டத்தின் தலையெழுத்தை மாற்றியது. பிரசித் வீசிய வேகம் குறைந்த பவுன்சர் பந்தை மில்லர் அடிக்க தவறினார். இதையடுத்து பைஸ் முறையில் ரன் எடுக்க மில்லரும், மறுமுனையில் இருந்த குல்தீப் யாதவும் ஓடினர். ஆனால் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் பந்தை துல்லியமாக எறிந்து குல்தீப் யாதவை ரன் அவுட் செய்தார்.
முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 20 பந்தில் 41 ரன்கள் விளாசிய மில்லரின் போராட்டம் வீணானது. சிங்கிள் ஓட மறுத்த தனது ஒற்றை முடிவால் வெற்றி பறிபோனதை எண்ணி மில்லர் மைதானத்திலேயே கண்ணீர் மல்க மிகுந்த வேதனையுடன் காணப்பட்டார்.
அப்போது அங்கு வந்த டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், மில்லருக்கு கைக்குலுக்கி, அவரது முதுகில் தட்டிக்கொடுத்து தேற்றினார். அக்சர் படேலின் இந்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications