டெல்லி : தோனிக்கு பின் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக மாறிய ரிஷப் பண்ட், தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில் தோனியை பின்பற்றியே அவர் கேப்டன்சி செய்து வருவது அவரது பேச்சில் இருந்து மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்றது, இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசி இருந்தார் ராசிக் சலாம். இம்பாக்ட் பந்துவீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்ட அவர் 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

டெல்லி அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களான கலீல் அஹ்மத் மற்றும் அன்ரிச் நோர்ஜே ஆகியோர் கூட 4 ஓவர்களை முழுமையாக வீசி முடிக்காத நிலையில் ராசிக் சலாமுக்கு முழுமையாக 4 ஓவர்களையும் வீச வாய்ப்பு அளித்தார் கேப்டன் ரிஷப் பண்ட். குறிப்பாக 19வது ஓவரை அவரிடம் கொடுத்தார். அந்த ஓவரில் 16 ரன்கள் கொடுத்த போதும் சாய் கிஷோர் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவே போட்டியில் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், போட்டிக்கு பின் பேசிய ரிஷப் பண்ட் தன் உள்ளுணர்வின் அடிப்படையில் ராசிக் சலாமை பயன்படுத்தியதாக கூறினார். "நோர்ஜே அதிக ரன்களை கொடுத்திருந்தார். 14 - 15 ஓவர்கள் வரை பந்து நன்றாக வந்தது. அதனால் ராசிக் சலாமை நம்ப முடிவு செய்தேன். ஒரு கேப்டனாக உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படுவது சில சமயம் வேலை செய்யும். அது இன்று வேலை செய்ததில் எனக்கு மகிழ்ச்சி." என்றார் ரிஷப் பண்ட்.
தோனியின் கேப்டன்சி இதே போல உள்ளுணர்வின் அடிப்படையில் தான் அமைந்து இருக்கும். அவரது சிஷ்யனாக தன்னை காட்டிக் கொள்ளும் ரிஷப் பண்ட்டும் அதே போல உள்ளுணர்வை பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்.