டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளில் 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் கேகேஆர் அணி வெற்றி பெறுவதற்கு சுனில் நரைன் முக்கிய காரணமாக அமைந்தார். பேட்டிங்கில் 16 பந்துகளில் 27 ரன்களை விளாசிய சுனில் நரைன், பவுலிங்கில் 4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதேபோல் டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேனான கேஎல் ராகுலையும் ரன் அவுட் செய்து அசத்தினார்.

அதுமட்டுமல்லாமல் ரஹானே காயம் காரணமாக பாதியோடு மைதானத்தில் இருந்து வெளியேறிய போது, சுனில் நரைன் பொறுப்பு கேப்டனாகவும் செயல்பட்டு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இதனால் சுனில் நரைனுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்பின் சுனில் நரைன் பேசுகையில், இந்த வெற்றிக்கு ஒரு குழுவாக எங்கள் அனைவருக்கும் கிடைத்த ஒன்று.
பேட்டிங்கில் ரகுவன்ஷி மற்றும் ரிங்கு சிங் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எப்போதும் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருப்பேன். சில போட்டிகளில் சிறப்பாக தொடங்கி, பின்னர் வெற்றிக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். அதேபோல் சில போட்டிகளில் மோசமாக தொடங்கி, மோசமாக முடிப்போம்.
என்னை பொறுத்தவரை அனைத்து பிட்சிகளில் பவுலிங் செய்யவும் விரும்புவேன். எந்த பிட்சையும் குறை சொல்ல போவதில்லை. அதேபோல் எப்போதும் மோசமான ஃபீல்டராகவே இருந்துள்ளேன். ஆனால் கேஎல் ராகுலை ரன் அவுட் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. சரியாக திசையில் த்ரோ செய்ய வேண்டும் என்பதே இலக்கு. அதனை நினைத்து பெருமை கொள்கிறேன்.
அதேபோல் ஸ்டாண்ட் இன் கேப்டனாக எந்த நேரத்திலும் செயல்பட தயாராக இருப்பேன். அதற்கான வாய்ப்புகளையும் திறந்தே வைத்திருப்பேன். நாம் சிறந்த வீரராக, கேப்டனாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்ல வேண்டுமென்றால், பயிற்சி இல்லாத போதும் கூட கடினமாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.