கடைசி 4 ஓவரில் 36 ரன்கள்.. டீம் ஹாட்ரிக் வேற.. திணறிய கேகேஆர்.. டெல்லி வெற்றிக்கு 205 ரன்கள் இலக்கு!
டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 5 ஓவர்களில் கேகேஆர் அணி வெறும் 46 ரன்களை மட்டுமே சேர்த்து 5 விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்தது. அதேபோல் கடைசி ஓவரில் டெல்லி அணி டீம் ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து கேகேஆர் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் - குர்பாஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரியுடன் குர்பாஸ் ரன் குவிப்பை தொடங்க, 2வது ஓவரில் சுனில் நரைன் சிக்சருடன் தொடங்கினார்.

சமீரா வீசிய 2வது ஓவரில் மட்டும் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 25 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து மிட்சல் ஸ்டார்கின் 3வது ஓவரில் 4, 4, 6 என்று பொளந்துகட்ட, அந்த ஓவரின் கடைசி பந்தில் குர்பாஸ் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் கேப்டன் ரஹானே களம் புகுந்தார். அவரும் மிட்சல் ஸ்டார்க்கை அட்டாக் செய்ய, பவர் பிளே ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 79 ரன்களை எட்டியது.
இதனைத் தொடர்ந்து விப்ராஜ் வீசிய 7வது ஓவரில் சுனில் நரைன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அக்சர் படேல் வீசிய அடுத்த ஓவரிலேயே ரஹானே 26 ரன்களில் வெளியேறினார். இதனால் கேகேஆர் அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ரகுவன்ஷி அதிரடியாக விளையாட, வெங்கடேஷ் ஐயர் வழக்கம் போல் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து ரகுவன்ஷி - ரிங்கு சிங் கூட்டணி இணைந்து கேகேஆர் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஓவருக்கு கட்டாயம் ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்ததால், கேகேஆர் அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 159 ரன்களாக உயர்ந்தது. இந்த நிலையில் சிறப்பாக ஆடிய ரகுவன்ஷி 44 ரன்களில் ஆட்டமிழக்க, ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு ரிங்கு சிங் - ரஸ்ஸல் கூட்டணி வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் ரிங்கு சிங் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 36 ரன்களில் ஆட்டமிழக்க, ரோவ்மன் பவல் களமிறங்கினார். தொடர்ந்து 19வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட 14 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரை வீச ஸ்டார்க் வந்தார். அந்த ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டாலும், டெல்லி அணி டீம் ஹாட்ரிக் எடுத்து அசத்தியது. இதனால் கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications