IPL 2025: முதல் ஓவரிலேயே சோலி முடிந்தது.. அரண்டு போன டெல்லி.. Unsold முன்னாள் சிஎஸ்கே வீரர் சம்பவம்
விசாகப்பட்டினம்: 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் முதல் ஓவரிலேயே மிகப்பெரிய திருப்பம் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
அடுத்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆடியது. அந்த அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஷர்துல் தாக்கூர் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ஜேக் பிரேசர்-மெக்கர்க் விக்கெட்டை வீழ்த்தினார். ஐந்தாவது பந்தில் அபிஷேக் போரலை டக் அவுட் ஆக்கி அனுப்பினார்.

அடுத்து மூன்றாவது ஓவரை வீசிய மணிமாறன் சித்தார்த் சமீர் ரிஸ்வி விக்கெட்டை வீழ்த்தினார். இதை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. அதன் பின்னர் அக்சர் பட்டேல் மற்றும் பாஃப் டூ பிளசிஸ் இணைந்து அணியை மீட்க போராடினர்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அனைத்து அணிகளாலும் புறக்கணிக்கப்பட்டவர் தான் ஷர்துல் தாக்கூர். 2024 ஐபிஎல் தொடரில் அவர் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்தார். அந்த அணியும் அவரை ஏலத்தில் வாங்கவில்லை.
பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் காயத்தில் சிக்கியதால் அந்த அணி கடைசி நிமிடத்தில் மொஹ்சின் கானுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை ஒப்பந்தம் செய்தது. அப்படி கடைசி நேரத்தில் இடம் பெற்ற ஷர்துல் தாக்கூர் முதல் ஓவரிலேயே 2 விக்கெட் எடுத்து மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
இதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் அவர் தன்னை ஏலத்தில் எடுக்காத அனைத்து அணிகளுக்கும் மிகப்பெரிய செய்தியை சொல்லி இருக்கிறார். அக்சர் பட்டேல் 22 ரன்களும், டூ பிளசிஸ் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் ஓவரில் ஏற்பட்ட இழப்பால் டெல்லி பெரிய சரிவை சந்தித்தது.
செய்தி சுருக்கம்:
- டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூர் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- லக்னோ அணி 20 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்தது.
- டெல்லி அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
- காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காத ஷர்துல் தாக்கூர் கடைசி நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
- முதல் ஓவரிலேயே தாக்கத்தை ஏற்படுத்திய ஷர்துல் தாக்கூரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications