நானும் டிவில்லியர்சும் ராமர், லட்சுமணன்.. பிரிக்கவே முடியாது.. சரி ஏன் தோத்தீங்கன்னு சொல்லுங்க கோலி
பெங்களூரு: டி வில்லியர்ஸூம், நானும் ராமர்- லட்சுமணன் போன்ற சகோதரர்கள் என்று பெங்களூரு கேப்டன் கோலி தெரிவித்தார்.
ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் சீசனும் மோசமானதாக அமைந்தது.அவ்வளவு படுதோல்வியை சந்தித்த அந்த அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. ஆனாலும், இந்த தொடரில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த சீசனுக்கான கடைசி ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி விளையாடியது. போட்டி தொடங்கும் முன் செய்தியாளர்களுக்கு கோலி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: டி வில்லியர்ஸூம், நானும் 'ராமர்- லட்சுமணன்' போன்ற சகோதரர்கள். எங்களது நட்பை யாரும் பிரிக்க முடியாது என்றார்.

448 ரன்கள் குவிப்பு
இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் விராட் கோலி 14 போட்டிகளில், 13 இன்னிங்ஸ் விளையாடி 448 ரன்கள் குவித்துள்ளார். டி வில்லியர்ஸ் 13 போட்டிகளில், 12 இன்னிங்ஸ் விளையாடி 441 ரன்கள் எடுத்துள்ளார். எனினும் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டனர்.

பெங்களூரு களமிறக்கம்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் 70 ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். பின்னர், 176 ரன்கள் என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது.

1 ரன்னில் ஆட்டமிழப்பு
தொடக்க வீரராக களமிறங்கிய பார்தீவ் படேல் ரன் எதுவும் எடுக்காத நிலையிலும், கேப்டன் விராட் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டி வில்லியர்ஸூம் ஒரு ரன்னிலும் அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் வெளியேறினர். அதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

பெங்களூரு வெற்றி
எனினும் ஹெட்மய்யர் மற்றும் குர்கிரீத் சிங்கின் சிறப்பான ஆட்டத்தால் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம், ஐபிஎல் தொடரில் வெற்றியுடன் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி வெளியேறி உள்ளது.


Click it and Unblock the Notifications