13 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி.. தோனி - யூசஃப் சாதனையை தகர்த்த இளம் வீரர்கள்.. ரசிகர்கள் வியப்பு
மும்பை: இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முன்னாள் வீரர்கள் எம்.எஸ்.தோனி மற்றும் யூசஃப் பதான் ஆகியோரின் 13 ஆண்டு சாதனை தகர்க்கப்பட்டிருக்கிறது.
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

முதல் டி20 போட்டி
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் அக்ஷர் பட்டேல் மற்றும் தீபக் ஹூடா அகியோரை கூறலாம். அதிரடியாக பேட்டிங் செய்ய நினைத்த இந்திய அணி 94 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா 130 ரன்களாவது அடிக்குமா என்ற நிலை உருவானது. அப்போது ஜோடி சேர்ந்த அவர்கள் இருவரும் 6வது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

சிறப்பான பார்ட்னர்ஷிப்
சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார். மறுமுனையில் அக்ஷர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார். இதனால் தான் இந்திய அணி 162 என்ற சவால் கொடுக்கும் ஸ்கோரை எட்ட முடிந்தது.

புது சாதனை
இந்நிலையில் அவர்கள் இருவரும் 13 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத சாதனையை முறியடித்தனர். டி20 கிரிக்கெட்டில் 6வது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் பட்டியலில் தோனி - யூசஃப் பதான் ஆகியோர் 2வது இடத்தில் இருந்தனர். இவர்கள் 2009ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தற்போது அக்ஷர் - ஹூடா ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் அதனை முந்தி 2வது இடத்தை பிடித்துள்ளனர்.

முதலிடத்தில் யார்?
இந்த பட்டியலில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஜோடி முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 2021ம் ஆண்டு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6வது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இன்றும் இந்திய அணியின் சிறந்த பேட்டிங் ஜோடியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications