Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் - கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழத்தியது டெல்லி

மொஹாலி: நேற்றிரவு மொஹாலியில் நடந்த ஆட்டத்தில் சங்ககாரா தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, கவுதம் கம்பீரின் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தியது.

முதலில் டாஸ் வென்று பேட் செய்த பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் ரவி போபரா 56 ரன்கள் (48 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.

முன்னாள் கேப்டன் யுவராஜ்சிங் 4 ரன்களில் அவுட்டானார். கேப்டன் சங்கக்கரா 17 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் திர்க் நேன்ஸ், மகரூப் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து ஆடிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் (8 ரன்), தில்ஷான் (0) இருவரும் ஸ்ரீசாந்தின் ஒரே ஓவரில் வீழ்ந்தனர். தொடர்ந்து டிவில்லியர்ஸ் ரன்-அவுட் ஆனார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான கவுதம் கம்பீர் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டார். கடைசி ஓவரில் 4 ரன் தேவையாக இருந்த போது, அந்த ஓவரில் கம்பீர் (72 ரன், 54 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஆனால் மன்ஹாஸ் (31 ரன், நாட்-அவுட்) பவுண்டரி அடித்து இலக்கை தொட்டார். டெல்லி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யூசுப்பின் புயல் வேக 'சென்சுரி'

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மும்பை இந்தியன்ஸ் அணி வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நான்கு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

எனினும் மும்பை இந்தியன்ஸின் வெற்றியை விட, எதிரணியின் யூசுப் பதான் வெளுத்துக்கட்டிய சதம் பற்றித்தான் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

'கிரிக்கெட்டில் இதுவரை நான் பார்த்த விளாசல்களிலேயே இதுதான் சிறந்தது' என யூசுப்பின் அதிரடியைப் பார்த்து பரவசப்பட்டு சொன்னார் ராயல்ஸ் கேப்டன் வார்ன்.

6.3 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் கோதாவில் இறங்கிய யூசுப், புயல் போல விளையாடி 37 பந்துகளில் 100 ரன்களை அடித்து தூள் கிளப்பினார்.

ஆனாலும் அவரின் அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இதுவரை நடந்த எல்லா டுவென்டி20 போட்டிகளில் இரண்டாவது வேகமான சென்சுரி என்ற பெருமையை யூசுப் தட்டிச்சென்றார்.

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோர் என்ற இலக்கை உருவாக்கியது.

ஜெயசூரியாவும் சச்சின் டெண்டுல்கரும் அதிரடி துவக்கம் கொடுத்ததில் 21 பந்துகளில் 38 ரன்கள் குவிந்தன. ஜெயசூரியா 14 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 23 ரன்கள் எடுத்தும் சச்சின் டெண்டுல்கர் 11 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

இன்று...

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸை சந்திக்கிறது. இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

முன்னதாக 4 மணிக்குத் தொடங்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சந்திக்கின்றன.

சச்சின், கம்பீர், சங்ககாராவுக்கு 20,000 டாலர் அபராதம்!

இதற்கிடையே, மெதுவாக பந்துவீசி நேரத்தை வீணாக்கியதற்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் கவுதம் கம்பீர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் சங்ககாரா ஆகியோருக்கு தலா 20 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளின் போது பந்தை மெதுவாக வீசி நேரத்தை வீணாக்கும் அணிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு அணிக்கும் பந்து வீசுவற்கு 80 நிமிடங்கள் அவகாசம் தரப்படும். அதில் ஒவ்வொரு பத்து ஓவர்களுக்கும் இடையில் ஏழரை நிமிடங்கள் இடைவெளி அவகாசமாக எடுத்துக் கொள்ளலாம். மொத்த போட்டியும் 3 மணி நேரம் 15 நிமிடங்களுக்குள் முடிய வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காவிட்டால், அந்த அணியின் கேப்டனுக்கு முதலில் 20 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும்.

2வது முறையாக இந்தத் தவறை செய்தால், மொத்த அணிக்கும் 2 லட்சத்து 20 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும்.

3வது முறையாக செய்தால் மொத்த அணிக்கும் 3 லட்சத்து 60 ஆயிரம் டாலர் அபராதத்தோடு, அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு, ஒரு நாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மும்பை மற்றும் மொஹாலியில் நடந்த போட்டிகளில் மெதுவாக பந்து வீசப்பட்டதால் கேப்டன்கள் சச்சின், கவுதம் கம்பீர் மற்றும் சங்ககாரா ஆகியோருக்கு 20 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+